ஜூன் 14. உலக ரத்த தான தினம். ரத்த தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்காக்கும் தன்னார்வ ரத்த தானக் கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட தினம் தான் உலக ரத்த தான தினம்.  இந்த நாளில் 22 ஆண்டுகளாக எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் ரத்ததானம் செய்துவரும் வெங்கட் சாரின் சேவையை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

 "அய்யா... நீங்க தெய்வமா நின்னு... எங்க குடும்பத்தை காப்பாத்துநீங்கய்யா...". இந்தக் கண்ணீர் வார்த்தைதான்..., வலியால் துடித்த, உயிரைக் காத்த... இந்த ரத்ததானக் கொடையாளர்களை கடந்த 22 ஆண்டுகளாக சேவையாற்ற ஊக்குவித்து வருகிறது. 
 

கடந்த 2004 ம் ஆண்டு நண்பர்களாக இணைந்த கௌசிக், ஸ்ரீராம், வெங்கட் ஆகிய மூவரின் சேவை மனப்பான்மை தான், ANY TIME BLOOD, ரத்ததான சேவை அமைப்பை உருவாக்கியது. அது படிப்படியாக தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அழைத்தாலும் இவர்களது நண்பர்கள் ரத்ததானம் செய்யும் குருதிக் கொடையாளர்களாக மாறினார்கள். இன்று இந்த அமைப்பில் எட்டாயிரம் உறுப்பினர்கள். தமிழகம் மட்டுமல்ல, கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் உயிர்காக்கும் ரத்ததானம் சேவையை அளப்பறிய உள்ளத்துடன் ஆற்றி வருகிறார்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வெங்கட், எங்களது சேவையை இறைவன் கட்டளையாகத்தான் எண்ணிப் பார்க்கிறோம். யாரோ ஒருவர் படும் துயரத்தை, வேறோருவராக எண்ணாமல் நம் குடும்பத்தில் பிறந்த ஒருவராக நினைத்து, அவரது உயிர் காக்க குருதிக் கொடையளித்து வருகிறோம். இன்று ரத்ததானம் தினம். இந்தநாளை கடைபிடிக்கும்போது, ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வும், ரத்ததானம் கொடையாளர்களின் மதிப்புணர்வும் குறைந்து வருவதாகத்தான் உணர்கிறேன் என்றார் வருத்தத்துடன் வெங்கட்.

அதேபோல், ரத்ததானம் சேவையிலும் ஒருசில சமூக விரோதிகள் மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.  ரத்ததானம் செய்வதாக, போலியான செல்போன் எண்களை பதிவு செய்து, உயிரைப் பறிகொடுக்கும் தருணத்தில் இருக்கும் குடும்பத்தினரிடம், போக்குவரத்து செலவுக்கு ரூ.2000 அனுப்புங்கள், 3000 அனுப்புங்கள் என மிருகத்தனமான செயலுடன், பணத்தை வாங்கி, ஏமாற்றிச் செல்வதாகவும் பலர் வேதனையுடன் புகார் தெரிவிக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக ரத்ததானம் செய்யவேண்டும் என்றால் எவ்வளவு பெரிய மனப்பான்மை இவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். இந்த நாளில் ரத்ததானம் செய்வோரை ஊக்குவிக்க அரசு முன்வரவேண்டும். எத்தனையோ வீரதீரச் செயல்களுக்கெல்லாம் விருதுகள் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட தோராயமாக 60 ஆயிரக்கும் மேற்பட்ட யூனிட் வரை ரத்ததானம் அளித்துள்ள இந்த ஏடிபி கொடையாளர்களுக்கும் அரசு விருது வழங்கி கவுரவிக்கலாம். இதனால் புதிதாக ரத்ததானம் செய்ய முன்வருவோருக்கும் விழிப்புணர்வை ஏற்படலாம்.  வெங்கட் சார் போன்ற குருதிக் கொடையாளர்களுக்கு இந்த நாளில் மிகப் பெரிய சல்யூட்.

ரத்ததானம் சேவை செய்ய விரும்புபவர்கள் தங்களின் பெயர், ஊர், ரத்த வகை போன்ற தகவல்களை இந்த வாட்ஸ்அப் எண்ணில் 9843592000 தெரிவிக்கலாம். 

க.செய்யது அப்துல் கனி, ஆசிரியர், தாய்த்தமிழ் நாளிதழ்.

Related

“பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஐ.டி. நிறுவன ஊழியர்”