சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் "மாம்பழ மேளா -2026" பிரத்யேக மாம்பழக் கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார். ஜூன் 12 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாம்பழ கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடு பெற்ற மாம்பழ ரகங்கள், அங்ககச் சான்று பெற்ற மாம்பழங்கள் என, அல்போன்சா, கல்லமாங்கா, மல்கோவா, சுந்தர்ஜா, இமாம்பசந்த், ரஸ்வல்லி, பங்கனபள்ளி, அமரபள்ளி உள்ளிட்ட 18 வகையான மாம்பழங்கள் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை பார்வையிட்டு, விற்பனையை தொடங்கி வைத்த பின் மேடையில் பேசிய அமைச்சர் வினோத், மாம்பழம் வெறும் பழம் மட்டுமல்ல நமது பாரம்பரியத்தின் அடையாளம், தமிழரின் உணவு கலாச்சாரம். கிராமப்புற பொருளாதாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு அறிய இயற்கை வரப் பிரசாதம். உலகம் முழுவதும் பழங்களின் ராஜா என்ற போற்றப் படும் நம் மாம்பழம், தமிழ்நாட்டின் வேளாண்மையை உலக அரங்கில் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாட்டின் மாம்பழம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 905 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 9 லட்சத்து 45,446 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி திண்டுக்கல் தர்மபுரி திருவள்ளூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பெங்களூரா, பங்கனபள்ளி போன்ற ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தோட்டக்கலை துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மா பரப்பு விரிவாக்கம் இன்றி புதிதாக நடவு செய்யும் விவசாயிகளுக்கு 40% மானியத்தில் ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேசியத் தோட்டக்கலை துறையின் கீழ், அதிக மா கன்றுகளை நடவு செய்யும் விவசாயிகளுக்கு 40% மானியத்தில் ஒரு ஹெக்டருக்கு அதிகபட்சமாக ரூபாய் 45 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ஒரு ஹெக்டருக்கு 20,000 வரை மாணவ வழங்கப்படுகிறது. இந்த மாம்பழம் மேளா மூலம் இடைத்தரர்களின் ஆதிக்கம் நிறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்கிறது என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற கேள்விக்கு, 70 அடி நீர் இருப்பதால் மேட்டூர் அணை திறக்க முடியாத சூழல். விவசாயிகளை முதலமைச்சர் கைவிட மாட்டார். விவசாயிகளுக்கு தேவையானதை முதலமைச்சர் செய்து கொடுப்பார். விவசாயிகளின் பாசன வசதிக்காக நீர் தட்டுப்பாட்டை போக்கக்கூடிய வகையில் நீர் திறப்பை கொடுக்கும் வகையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து மாம்பழங்கள் மீது தெளிக்கப்படும் தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்த பூச்சிக்கொல்லி மருந்தினால், மாம்பழங்களில் ரசாயன தன்மை இருப்பதால், ஏற்றுமதி பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பூச்சிக்கொல்லி மருந்துகள் மாற்றப்பட்டுள்ளது என அமைச்சர் வினோத் பதில் அளித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.