கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பில் நான்கு முக்கிய சமூகநலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு. பவன் குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் திரு. கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், சாய்வுத்தள வசதியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான பிரத்யேக வாடகை வாகன சேவையான "சாரதி-5" அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் நடத்தப்படும் உள்ளடக்கிய உணவகமான "ஸ்வாக் கஃபே" திறந்து வைக்கப்பட்டது. தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் "சமர்த்" திட்டமும் தொடங்கப்பட்டது. மேலும், கோயம்புத்தூரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும், ரயிலின் உள்ளே செல்லக்கூடிய காப்புரிமை பெற்ற சக்கர நாற்காலிகள் மற்றும் சாய்வுத்தளங்களை வழங்கும் "சுகம்யா" திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்வர்கா பவுண்டேஷன், மாற்றுத்திறனாளிகளின் அணுகல்தன்மை, மறுவாழ்வு, ஆலோசனை மற்றும் விளையாட்டுத் துறைகளில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்பு இதுவரை 100-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. 

சமூக உள்ளடக்கம், அணுகல்தன்மை மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் இந்த முயற்சிகள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட "ஸ்வாக் கஃபே" உணவகத்தை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்த அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து தேநீர் பருகி, இந்த முன்னோடியான முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Related

““பாஜகவை விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வருமென பயமா?” - விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி”