விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் நிதியாண்டின் புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா நேரிடையாகத் துவக்கி வைத்து, மாணவ-மாணவியருக்கு வழங்கினார்.
முதற்கட்டமாக, *பெரியவள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு* நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு பயிலும் மாணவ, மாணவியரை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களுக்குத் தேவையான *புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களை வழங்கினார்* .
அதனைத் தொடர்ந்து, *குல்லூர்சந்தை வீரப்பா வித்யா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்* நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி புத்தகங்கள், இரு கோடு மற்றும் நான்கு கோடு எழுது புத்தகங்கள் மற்றும் புதிய சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்விப் பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி, மாணவர்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், *பாலவநத்தம் தொடக்கப்பள்ளிக்கு* நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கு முதன்முறையாக வருகை தந்த குழந்தைகளை இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வரவேற்றார். பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் சூழல் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பாலவநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2025-2026 ஆம் கல்வியாண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.