சென்னை: மின் துறை சார்ந்த ஹார்டு டிஸ்குகள் திருடு போனது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மின்துறை தலைமை அலுவலகத்தின் முக்கியமான துறைகளில் இருந்த ஒருசில ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.
ஒப்பந்த தொழிலாளர்களின் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் காணவில்லை. எத்தனை ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள என்பது குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. தற்போது எதையும் தெரிவிக்க முடியாது.
இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதனால் திருடப்பட்டன. அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என முழுமையான விசாரணைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்தோம், அதன்பிறகு இது நடந்ததா என சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது.
செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் தான் டிரான்ஸ்பார்மர் ஊழல் நடந்தது. டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் தடையை சீரமைக்க இன்னும் கால அவகாசம் வேண்டும். அனைத்தையும் சீரமைக்க ஒரு மாத காலம் போதாது.
மின்சார துறையில் கடன் இருக்கிறது; பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடந்த ஆட்சியில் பராமரிப்புப் பணிகள் சரியாக செய்யப்படவில்லை. மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.