திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய மண்டல சட்டம்-ஒழுங்கு மற்றும்     குற்ற நிலைமை குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வுக் கூட்டத்தில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், திருச்சி மாநகர துணை காவல் ஆணையர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் திருச்சி மாவட்டத்தில் தரவு மையத்தை திறந்து வைத்ததுடன், மத்திய மண்டலத்திற்குட்பட்ட எட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இதேபோன்ற        தரவு மையங்களையும் காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார். இந்த தரவு மையம் மூலம் காவல் நிலைய பதிவுகள், குற்றப் புலனாய்வு தொடர்பான விவரங்கள், வாகனத் தகவல்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் காவல் சேவைகளை காவல்துறையினர் எளிதாக அணுக முடியும். மேலும், சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் குற்றப் போக்குகளை கண்டறிதல், வழக்கமான குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல், பல்வேறு வழக்குகளுக்கு இடையிலான தொடர்புகளை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நுண்ணறிவுத் தகவல்களை வழங்குதல், சமூக ஊடகப் பிரிவு செயல்பாடுகள், வெளிநாட்டினர் பதிவு மற்றும் கண்காணிப்பு பணிகள், சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளில் தரவு அடிப்படையிலான முடிவுகள் ஆகியவற்றிற்கு இத்தரவு மையம் பயனுள்ளதாக அமையும்.

நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி, 

சட்டம்-ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் கண்டறிதல், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை கூர்ந்து கண்காணிக்கவும், தேவையான சந்தர்ப்பங்களில் ஜாமீன் ரத்து செய்யும் நடவடிக்கைகளை பயனுள்ள முறையில் மேற்கொள்ளவும், காவல் நிலைய அளவில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கினார்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறை தலைமை இயக்குநர் வலியுறுத்தினார். மேலும், பொதுமக்களின் பங்கேற்புடன் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்துக்குமார் கடந்த ஜூலை 2025-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

 அவரது மறைவையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை, அவரது மனைவி பாப்பா @ செல்விக்கு வழங்கினார்.

விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் சுமூகமாக நடைபெற சிறந்த பாதுகாப்பு வழங்கியமைக்காகவும் டிஜிபி பாராட்டினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 110 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறம்பட்ட காவல் பணியைப் பாராட்டி வெகுமதிகள் வழங்கப்பட்டன.

மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையைச் சேர்ந்த காவல் ஆளிநர்களுக்கு நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், மொத்தம் 143 காவல் ஆளிநர்கள் தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக பரிசீலிக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொபைல் தடய அறிவியல் வாகனத்தையும் பார்வையிட்டார்.

மேலும், 8 காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுடன் காவல்துறை தலைமை இயக்குநர் கலந்துரையாடினார். தொடர்ந்து, அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணத் தொகுப்பு, பேட்மிண்டன் விளையாட்டு உபகரணத் தொகுப்பு, சதுரங்கப் பலகைகள் மற்றும் கைப்பந்து விளையாட்டு உபகரணத் தொகுப்பு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

Related

“இப்படி ஒரு முதல்வரை வரலாறு கண்டதில்லை”