அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, கன்னிவாடியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அடுத்தபடியாக மூலனூரில் திரண்டிருந்த மக்களிடம் பேசினார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது;
“இந்த தேர்தல் எப்படி வந்தது? இது திணிக்கப்பட்ட தேர்தல். எம்.எல்.ஏ.வாக வென்றவர் இன்றைக்கு குதிரை பேரத்தில் விலைபோய் மாற்றுக்கட்சிக்கு சென்று, அங்கு வேட்பாளராக நிற்கிறார். நான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன், எவ்வளவு பெரிய ஜனநாயகப் படுகொலை இது. நீங்கள் கால்கடுக்க நின்று வாக்களித்தீர்கள், தொண்டர்கள் உழைத்தார்கள், இருதரப்பையும் உதாசீனப்படுத்திவிட்டார். அவரை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள். தக்க தண்டனையை கொடுங்கள்.
நம் வேட்பாளர் தேஜகூட்டணி சார்பில் அதிமுகவின் பானுமதி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலையில் வாக்களியுங்கள். உங்கள் வேட்பாளர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். ஏற்கனவே தாராபுரம் ஒன்றியச் சேர்மனாக இருந்தார், இரண்டுமுறை ஊராட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அதே வேளையில் மக்களுக்கு துரோகம் விளைவித்தவருக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும். இனி எவருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாது.
அவர் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்று 12 நாளில் என்ன ஆனது? என்ன கைமாறியது? அவரா மீண்டும் உங்களுக்கு சேவை செய்வார்? அவர் எப்படிப்பட்டவர் என்று அடையாளம் காட்டப்பட்டுவிட்டது. அவருக்கு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்தில் விஜய் பிரசாரம் செய்தார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். எம்.ஜி.ஆர். கையில் இரட்டை விரலை காட்டுகிறார். அதற்காக கையை துணி வைத்து கட்டிவிட்டனர். இது நியாயமா? விஜய் அவர்களே இரட்டை விரலை மறைக்கலாம் மக்கள் மனதில் இருந்து மறைக்க முடியாது. ஏனெனில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக.
அவர் அதிமுகவும் திமுகவும் ஒன்று என்கிறார். திமுகவை எதிர்த்து தான் அதிமுகவே தோன்றியது. அவருக்கு எதுவும் தெரியவில்லை. மக்களை குழப்புகிறார். அரசியல் காழ்புணர்ச்சியால் இப்படிப்பட்ட நாடகத்தை நடத்துகிறார்கள்.

உங்களைப் போல வாய் பேசாத முதல்வரை யாரும் பார்த்ததில்லை. ஐந்தரை மணி நேரம் அப்படியே இருக்கிறார், உண்மையிலே அது ஆச்சர்யம் தான். ஒருத்தரை ஒரு சேரில் ஐந்தரை மணி நேரம் அசையாமல் யாரும் பார்க்க முடியுமா? அதில் சாதனை படைத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் பதவி ஏற்றனர், அதுக்கு ஐந்தரை மணி நேரம் ஆச்சு, அவ்வளவு நேரமும் அப்படியே இருக்கார், நாங்கள் கூட இரண்டு முறை டீ குடித்துவிட்டு வந்துவிட்டோம் அவர் அசையவே இல்லை. இப்படிப்பட்ட முதல்வர் தான் விஜய். சட்டமன்றத்தில் பதிலே சொல்வதில்லை.
மக்கள் குரலுக்குத் தீர்வு காண்பது முதல்வரின் கடமை. 8 கோடி மக்களை காப்பது உங்களிடம் தான் இருக்குது. சும்மா உட்கார்வதற்கு உங்களை தேர்வு செய்யவில்லை. நானும் தான் முதல்வராக இருந்தேன். கேட்கும் கேள்விக்கு டான் டான் என்று பதிலளித்தேன். எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரும் இரண்டே முக்கால் மணிநேரம் பேசிய வரலாறு கிடையாது. நான் பேசினேன். 13 திமுக அமைச்சர்கள் பதில் சொன்னார்கள். மக்கள் பிரச்னையை தொடர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தோம். அப்படி பணியாற்றிய கட்சி இன்று வேடிக்கை பார்க்க வேண்டியதாகிவிட்டது.
இப்போது திமுக எதிர்க்கட்சி. அவர்கள் முதலில் பேசுவார்கள். அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர், மின் துறை அமைச்சர் ஏதாவது பேசுவார். இருவரும் மாற்றி மாற்றி பேசுவார்கள். நாங்கள் மக்கள் பிரச்னையை பேச நேரமே கிடைக்காது. இப்படித்தான் தினமும் நடக்கிறது. 10 மணி நேரம் நடக்கிறது, அதில் மக்கள் பிரச்னையை 3 மணி நேரம் தான். மீதி 7 மணி நேரம் வெட்டிப்பேச்சு தான். இதுக்காகவா சட்டமன்றம் கூட்ட வேண்டும்? முதல்வர் சட்டமன்றத்தில் அப்பாவை தேடுகிறாராம், எவ்வளவு கிண்டல் கேலியும் ஆகிவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க மாமன்றம் அது, அதில் அப்பனைக் காணோம் என்கிறார்.
முதல்வரின் கீழிருக்கும் காவல்துறை மானியத்தில் 50 நிமிடம் நான் பேசினேன். திங்கள் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இவர் ஓடிவிட்டார். நான் பேசுவது பதிவாகும், அதை படித்துப் பார்த்து பதில் சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் திங்களன்று எதற்கும் பதிலில்லை. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினார்.
இந்த ஆட்சி வந்த பின்னர் பல திட்டம் அறிவித்தனர், உரிமை தொகை, முதியோர் உதவி தொகை எதையும் உயர்த்தவில்லை. 125 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, வேலை செய்தவர்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லை. பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கொடுக்கவில்லை.
விவசாயிகள் பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்றார், ஆனால் செய்யவில்லை. ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு. விவசாயிகள் வயிற்றில் அடித்த, விவசாயிகள் விரோத அரசு இது, இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள். அதிமுக ஆட்சியில் இருமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். தவெக போல விவசாயிகளை ஏமாற்றவில்லை. நானும் விவசாயி தான். விவசாயிகளின் கஷ்டத்தை அனுபவ ரீதியாக அறிந்தவன். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளம் தூர்வாரினோம். மேட்டூர் அணை 83 ஆண்டு காலம் தூர்வாரவில்லை, நாங்கள் தான் தூர்வாரினோம். வண்டல் மண்ணை விலையில்லாமல் அள்ளிச்சென்றனர்.

அதிமுக திமுகவின் கிளையாம். 2021ல் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்றார். உங்களுக்கு எங்களை பற்றி பேச தகுதியில்லை. அதிமுகவுக்கு எப்போதுமே மக்கள் தான் நீதிபதிகள். எம்ஜிஆர், அம்மா காலத்திலும் சிறந்த நிர்வாகமிக்க அரசு என்று பெயர் எடுத்த அரசு. தாலிக்குத் தங்கம் கொடுத்தோம், அதனை பெயர் மாற்றி இவர் விளம்பரப்படுத்துகிறார்.
தாய்மாமன் சீர் திட்டம் 750 கோடிதான் செலவு, அதுக்கு விளம்பரத்துக்கு ஏக செலவு. காலை உணவுத் திட்டம் எனது ஆட்சியில் தனியார் பங்களிப்போடு சென்னையில் துவக்கிவைத்தோம். பிறகு திமுக விரிவுபடுத்தியது, தவெகவும் அதையே செய்தது. விளம்பரம் மாடல் அரசு இது, ரீல்ஸ் - ரீல் விடுவது இரண்டு தான் ஆட்சியின் சாதனை.
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கியபோதே உங்கள் செல்வாக்கு போய்விட்டது. அண்மையில் லண்டன் போனார், அங்கு யாரை பார்க்க போனார் என்பது உங்களுக்கே தெரியும். தமிழகத்தில் தொழில் நடத்திவரும் நிறுவனத்தினரை லண்டனுக்கு அழைத்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார். என்ன வேடிக்கை இது? அடுத்து சுவிட்சர்லாந்து போகிறாராம்.
அண்மையில் டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு மேட்டூரில் நீர் திறக்க மட்டும் நான்கரை கோடி செலவு, ஆனால் மேட்டூர் அணை கட்டிய செலவே நான்கரை கோடி தான். இவரா மக்களை காப்பாற்றுவார்?
10 லட்சம் கோடி கடன் இருக்கும்போது எதுக்கு புதிய தலைமைச் செயலகம்? சினிமா மாதிரியே ஆட்சியை நினைக்கிறார். மக்களுக்கான திட்டத்துக்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் பட்டினப்பாக்கத்தில் மீனவர் குடியிருப்பு அருகில், அவர் வீடு இருக்கும் இடத்தில் கட்டுவாராம். எல்லா கட்சிகளும் எதிர்த்தது, இன்னும் தீர்வு சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அரசு செயல் இழந்துவிட்டது. போதை தாராளமாகக் கிடைக்கிறது. மின்கட்டணம் உயர்வு, மின்வெட்டு அதிகரித்து வருகிறது. உயர் கோபுர மின் கம்பங்கள் அமைக்காமல், பூமிக்கடியில் பதிக்க கோரிக்கை வைத்தீர்கள், அதிமுக குரல் கொடுக்கும்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் முறையாக தண்ணீர் கொடுத்தோம். திமுக ஆட்சியிலும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை, பராமரிப்பு சரியில்லை. அதனால் தான் நீர் கிடைக்கவில்லை. அதிமுக இதனை சீர்செய்ய முனையும். எனவே அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்…’’ என்று பேசினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.