தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கார்த்தனூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் சசிகுமார். இவர் நேற்று தனது உறவினர்களுடன் காரில் ஏற்காட்டிற்குச் சுற்றுலா வந்துள்ளார்.
சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப்பார்த்த இவர்கள், சேர்வராயன் கோவில் பகுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். ஈச்சங்காடு பகுதி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் சசிகுமாரின் உறவினரான விசித்ரா என்பவருக்குப் பற்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்துத் தகவலறிந்த ஏற்காடு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி அப்பகுதியில் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
தொடர்ந்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு விசித்ராவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.