கோவில்பட்டி, அக்.2-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். 
இதனைத் தொடர்ந்து, துரை வைகோ எம். பி., செய்தியாளர்களிடம் பேசியதாவது; ஓம் காளி ஜெய் காளி த. வெ. க., ஒரு ஓடுகாளி என்ற அர்த்தத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேட்டதற்கு, 
ஒரு கட்சியின் கீழ்நிலையில் உள்ள தொண்டர்கள் இதுபோன்ற கோஷங்களை ஆர்வ மிகுதியில் எழுப்புவார்கள். தலைவர்கள் இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்கள். குடு குடுப்பைக்காரர்கள் இதுபோன்று தான் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். உதயநிதி பேசியதை பார்க்கும் போது எனக்கு அந்த நியாபகம் தான் வருகிறது. கண்ணியமான முறையில், கருத்தியல் ரீதியாக வாதங்கள் வைக்க வேண்டும். தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் கோஷங்களை எழுப்புவார்கள். அதனை கட்டுப்படுத்தி நெறிப்படுத்த வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை. ஆனால் உதயநிதி ஸ்டாலினே இதுபோன்று வசனங்கள் பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்றவை தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமல்ல, திமுக என்ற ஒரு உன்னதமான இயக்கத்திற்கும் சரி கிடையாது என்றார்.

மதிமுக கட்சியினர் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மதிமுக ஆரம்பிக்கப்பட்டது. லஞ்ச லாவண்யம் இல்லாத அரசை முதல்வர் ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். என்ன மாற்றத்தை நாம் எதிர்பார்த்தோமோ, எந்த மாற்றத்தை நாம் கொண்டுவர நினைத்தோமோ அதை த.வெ.க கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு மதிமுக உறுதுணையாக இருக்க வேண்டும். 

தாராபுரத்தில் மக்களுடன் கலந்து பேசும்போது அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் த. வெ. க.,வுக்கும், அதிமுக., வுக்கும் இடையில் தான் போட்டி என்று சொன்னார்கள். திமுக., லிஸ்ட்டில் இல்லை. திமுக., மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திமுக., தலைமை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திமுக., டெபாசிட் இழந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார். 
மீனவர்கள் நிறைந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் வரக்கூடாது என்ற கருத்தில் நானும் உறுதியாக இருக்கிறேன். பரந்தூர் விமான நிலைய பிரச்சினையில் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் ஜோசப் விஜய் உறுதியான முடிவெடுத்தார். 

நடிகர் தனுஷ் போன்று பல்வேறு நடிகர்கள், தொழிலதிபர்கள் என யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். அந்த இயக்கம் செயல்படுகிறதா, வெற்றி பெறுகிறதா என்பது மக்கள் கையில் தான் உள்ளது. யாரும் யாரையும் பலவீனப்படுத்த முடியாது. 

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் பெண்களை நூற்றாண்டு காலம் பின்னோக்கி கொண்டு செல்கிறது என்ற கனிமொழி எம். பி., கூறியதாக சொல்லப்படும் கருத்தை உண்மையிலேயே அவர் கூறினாரா என்பது தெரியவில்லை. தாய்மாமன் சீர் என்பது தனது உடன்பிறந்த சகோதரியின் குழந்தைகளுக்கு பாசத்துடன் சீர் செய்வது வழக்கம். குறிப்பாக தென் தமிழகத்தில் ஒரு கலாச்சார பண்பாடாக இருக்கிறது. அதுகுறித்த கருத்துக்களை கனிமொழி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தாய்மார்களுக்கு இந்தத் திட்டம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தாய்மாமனாக இருந்து முதல்வர் விஜய் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.

Related

“ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு : மார்க்சிஸ்ட் கம்யூ. புகார்”