சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பைப்புகள் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருவதாகவும், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவித்தனர். கழிவுநீர் செல்லும் சேம்பர்கள் உடைந்து திறந்த நிலையில் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மேலும், பிரேதப் பரிசோதனை அறை அருகே மார்ச்சுவரிக்கு உடல்களை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் செல்லும் பாதையில் சாலை சேதமடைந்து தாழ்வாக இருப்பதாகவும், இதனால் எந்த நேரத்திலும் ஆம்புலன்ஸ் கவிழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் உள்ள சில கழிவறைகளிலும் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், சிறுநீர் கழிப்பதற்கான பைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

மருத்துவமனை வளாகத்தில் கான்கிரீட் சாலைகள் சில இடங்களில் சீரற்ற உயரம், தாழ்வுடன் காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வளாகத்தில் நடந்து செல்லும்போது சிரமங்களை சந்திப்பதாகவும் கூறினர். மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் சுகாதார ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் பணியில் இல்லை என்றும், இதனால் சுகாதாரப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன் குற்றம் சாட்டினார்.
மருத்துவமனை வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்து கழிவுநீர் தேக்கம், உடைந்த பைப்புகள், சேதமடைந்த சாலைகள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் ராயபுரம் பகுதி குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். 
 

Related

“இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறது திமுக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ குற்றச்சாட்டு”