தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் மேகதாது அணை முயற்சியை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வலுவான அழுத்தத்தை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கொடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மேகதாது அணை அமையவுள்ள பகுதியை மத்திய நீர் ஆணையக் குழு நேரில் பார்வையிட்டுள்ளதாகவும், அங்கு தேக்கப்படும் தண்ணீரை பாசனத்திற்குப் பயன்படுத்த முடியாது என்பதை அக்குழு புரிந்துகொண்டுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே இயல்பாகவே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நீர் ஆணையத்திடம் மேகதாது திட்டத்திற்கான விரைவான மதிப்பீடு மற்றும் அனுமதியையும் கர்நாடக அரசு கோரியுள்ளது ஏற்புடையதல்ல. குடிநீருக்காக மட்டுமே அணை கட்டுகிறோம், தமிழகத்தின் அச்சம் தேவையற்றது என்று கூறுவதால் தமிழகத்தின் நியாயமான கவலைகளை புறந்தள்ளிவிட முடியாது.
காவிரி என்பது இரு மாநிலங்களுக்கும் தொடர்புடைய மாநிலங்களுக்கு இடையேயான நதி. அதன் நீரோட்டத்தில் ஏற்படும் எந்த முக்கிய மாற்றமும் கீழ்ப்பாசன மாநிலமான தமிழகத்தின் விவசாயம், குடிநீர் மற்றும் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. தமிழக அரசும் இந்த விவகாரத்தை மிகுந்த விழிப்புடன் அணுகி, சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தமிழகத்தின் உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்க வேண்டும்.
காவிரி தமிழகத்தின் உயிர்நாடி,அதன் நீர் உரிமையில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. மேகதாது அணை தொடர்பான ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கர்நாடக அரசு கைவிட்டு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்களில் நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் அமைப்புசார் செயல்முறைகளை மதித்து செயல்பட வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்..
தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வலுவான அழுத்தத்தை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கொடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.