தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம் பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், கம்பம் எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சார்பில், மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ​இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சின்னமனூர் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குத் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் ஆகியோர் தலைமை தாங்கினர்.​இந்நிகழ்ச்சியில் சின்னமனூர் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200 கர்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் அவர்கள் சார்பில் பழங்கள் அடங்கிய தட்டு, முந்திரிப் பருப்பு, பாதாம், சத்துமாவு, துண்டு, ஹார்லிக்ஸ் போன்றவை அடங்கிய சுமார் ₹1,500 மதிப்புள்ள பரிசுப் பெட்டகமும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்து வகையான கலவைச் சாதங்களுடன் வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர், கர்ப்பிணிப் பெண்கள் எவ்வாறான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், கர்ப்ப காலத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

​அவரைத் தொடர்ந்து பேசிய தேனி மாவட்ட ஆட்சியர், "சமுதாய வளைகாப்பு என்பது உணர்வு சார்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். கர்ப்பிணி தாய்மார்கள் அரசின் வழிகாட்டுதலின்படியும் மருத்துவர்களின் அறிவுரையின்படியும் தங்களது உடல்நலனைப் பாதுகாக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நல்ல சிந்தனைகளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

​மேலும் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.​இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ​இதேபோன்று கம்பம் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கும் பரிசுப் பெட்டகங்களும் வளைகாப்பு விருந்தும் வழங்கப்பட்டன.

Related

“கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 300-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!”