சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பணியாற்றும் மாநகராட்சி லாரி ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரித்து கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லும் சுமார் 300-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
குப்பைகளை கொட்டுவதற்காக லாரிகள் வளாகத்திற்குள் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் உரிய நேரத்தில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள முடியாததுடன், உணவு உண்ணவும், பணி நேரத்தில் முடிக்கவும் சிரமம் ஏற்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், குப்பை கிடங்கு பகுதியில் பணியாற்றுவதால் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும், பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க், பூட்ஸ், கையுறை, கண்ணாடி, சீருடை, சோப்பு, டவல் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் வசதிகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பை கொட்டும் பாயிண்ட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், இயந்திரங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். குப்பை கிடங்கில் லாரிகள் செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களை கான்கிரீட் மூலம் சீரமைத்து, மழைக்காலத்தை கருத்தில் கொண்டு சாலையில் ரப்பீஸ் உள்ளிட்டவற்றை கொட்டி பாதையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், எடை போடும் அலுவலகத்தில் நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகள் வளாகத்திற்குள் செல்ல முடியாமலும், உள்ளே இருந்த லாரிகள் வெளியே செல்ல முடியாமலும் நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குப்பை லாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் பட்டாபி, பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராஜேந்திரன், துணைப் பொதுச்செயலாளர்கள் ராஜன், முனுசாமி, துணைத்தலைவர்கள் தேவராஜ், திருவேட்டை, பா.சுந்தரம் உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.