செங்கல்பட்டு, அக்.2- 
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடுமையான தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. முன்அறிவிப்பின்றி திடீர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால், அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகள் கொசுத்தொல்லையாலும், வெப்பத்தின் தாக்கத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தூக்கத்தைத் தொலைத்துத் தவித்து வருகின்றனர். மேலும், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இரவில் மின்சாரம் இல்லாததால் அவர்களால் சரிவரப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் தூக்கமின்மையால் தவிக்கும் மாணவர்கள், மறுநாள் காலையில் சோர்வுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் கல்வியையும் உடல்நலத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சாரத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், அதிகாரிகள் தரப்பில் முறையான மற்றும் திருப்திகரமான பதில்கள் அளிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் தொலைபேசி அழைப்புகளை அதிகாரிகள் எடுப்பதே இல்லை என்றும், மக்களின் நியாயமான புகார்களை அலட்சியப்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டிய மின்சாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துச் சமூக ஆர்வலர் சிங்கை கணேஷ் தெரிவிக்கையில், “சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு, மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஓரிரு நாட்களுக்குள் இதனைச் சீரமைக்க வேண்டும். பொதுமக்களையும் மாணவர்களையும் வஞ்சிக்கும் இந்த மின்வெட்டுப் பிரச்சினைக்குக் காலம் தாழ்த்தாமல் உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். தவறினால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களைத் திரட்டி, சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெரும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். 
 

Related

“திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகள் தொல்லை - தட்டிக் கேட்ட பெண் மீது செங்கல் எரிந்து தாக்குதல்”