தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கஞ்சா போதையில் நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் மற்றும் விசுவாசபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் ஆகியோருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். மூவரும் கஞ்சா மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விக்னேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை ஜெயக்குமார் ஓட்டிச் சென்றபோது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கூறி காவல்துறை 12,000 ரூபாய் அபராதம் விதித்துப் பறிமுதல் செய்தது. அந்தப் பணத்தைக் கட்டி வாகனத்தை மீட்ட விக்னேஷ்குமார், அபராதத் தொகையைத் தருமாறு ஜெயக்குமாரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

​இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜெயக்குமாரை போனில் அழைத்துச் சென்ற நண்பர்கள், சில்லமரத்துப்பட்டி – பெருமாள்கவுண்டன்பட்டி சாலையில் உள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று மது அருந்தியுள்ளனர். அங்கு மீண்டும் பணப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம்  முற்றியுள்ளது.

​இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ்குமாரும் ஹரிபிரசாத்தும் சேர்ந்து, தோட்டத்திலிருந்த வயர்கள் மற்றும் பைப்புகளால் ஜெயக்குமாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவரது கை, கால்களைக் கட்டி 110 அடி ஆழமுள்ள கிணற்றில் வீசிக் கொன்று தப்பியோடினர்.​தகவலறிந்து வந்த போடிநாயக்கனூர் ஊரக காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும், சுமார் 3 மணி நேரம் போராடி ஜெயக்குமாரின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உசிலம்பட்டி அருகே தலைமறைவாக இருந்த விக்னேஷ் குமார் மற்றும் ஹரிபிரசாத் ஆகிய இருவரையும்  கைது செய்தனர். இக்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

“கம்பத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்த தம்பதியர்: மனைவி பலி, கணவனுக்குத் தீவிர சிகிச்சை!”