வாஷிங்டன்: ஈரான் போரை உடனடியாக நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும் தற்காப்பு தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்தத்தை மீறி வருகின்றன.
இந்த சூழலில் ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஐனநாயக கட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 215 எம்பிக்களும், எதிராக 208 எம்பிக்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
இந்த தீர்மானத்தின் மீது செனட் அவையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மொத்தமுள்ள 100 எம்பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்பிக்கள் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு 45 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த சில எம்பிக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய முடியும். இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, “லெபனான் மீதான தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.