பிரான்ஸ் நாட்டில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்து நிலையில் கடைகள் சூறையாடப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்த்து, கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், விலைவாசி உயர்வு, பணவீக்கம், அரசின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். மாணவர் அமைப்புகளுடன் தொழிற்சங்கங்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் ‘மஞ்சள் அங்கி’ இயக்கத்தினரும் இணைந்துள்ளதால் இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சக தகவலின்படி 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 8 லட்சத்துக்கும் அதிகமானோர் போராடி வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பாரிஸ், மார்சேய், லில், நிஸ் நகரங்களில் வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
லிமோஜஸ் பகுதியில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடம் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 2 உலகப் போர்களை தாங்கிநின்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் சாம்பலாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது மட்டுமின்றி பல இடங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இந்த அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூகவிரோத கும்பல் சூப்பர் மார்க்கெட்டுகள், செல்போன் கடைகள் மற்றும் வணிக வளாகங்களை அடித்து நொறுக்கி, பொருட்களை அள்ளிச் செல்கின்றனர்.
இதனைத் தடுக்க முயன்ற கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களையும் வன்முறையாளர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.அந்த வீடியோக்களில், கடைகளைக் கொள்ளையடிப்பதை வன்முறையாளர்கள் ‘அர்ஜென்ட் ஷாப்பிங்’ எனக் குறிப்பிடுவதை காண முடிகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இச்சம்பவங்களில் இதுவரை 1,200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 போலீஸார் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
இன்னும் 6 மாதங்களில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அதிபர் மேக்ரான் அரசுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.