ஸ்ரீவில்லிபுத்தூர்: உலகப்புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தேரின் மேல் பாகம் கந்தல் துணிகளால் மூடப்பட்டிருப்பது பக்தர்களிடம் வேதனை அடையச் செய்துள்ளது.

 ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வோராண்டும் நடக்கும் ஆடித் தேரோட்டம் உலகப்புகழ் பெற்றதாகும். இந்த மாதம் 14-ந்தேதி, வெள்ளிக்கிழமை அன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்தத் தேரோட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக கும்பகோணத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரரிடம் தேரின் மேல் அமைப்புகளைப் பொருத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ஒப்பந்தக்காரர், அழுக்கான, கந்தல் துணிகளைக் கொண்டு அந்தத் தேரின் மேல் பகுதியை மூடியுள்ளார். அழகான தமிழ்ப் பாசுரங்களைப் பாடிய ஆண்டாளின் தேர், கந்தல் துணிகளால் மூடப்பட்டிருப்பது குறித்து பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

ஆனால், கோவில் நிர்வாகத்துக்கு இது குறித்து அக்கறை எதுவும் இல்லை.  இது கண்ட இந்து முன்னணி அமைப்பினர், ஊர்வலமாகச் சென்று, ஆண்டாள் திருக்கோவிலின் செயல் அலுவலர் சக்கரையம்மாளிடம் மனுக்கொடுத்து, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது உள்ள மேல் மூடாப்பு துணி 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதாகவும், புதிய துணிகளை வாங்க ரூ.11½ லட்சம் செலவாகும் என்றும் செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்தார். எனினும், அழுக்கான கந்தல் துணிகளுக்குப் பதிலாக புதிய துணிகள் வாங்கி மூடப்படும் என்றும் அவர் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் உறுதியளித்தார். ஏற்கனவே, இத் திருக்கோவிலுக்கு வாங்கப்பட்ட அதிக விலை மதிப்புள்ள மூடாப்பு துணிகள், பொறுப்பற்ற முறையில் மூலையில் சுருட்டிப் போடப்பட்டதால், அது பயனற்றுப் போனதாகத் தெரிய வருகிறது. 
இப்பேச்சுவார்த்தையில், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர், கே.கே. பொன்னையா, வினோத், விஸ்வ இந்து பரிஷத் யுவராஜ், கிருஷ்ண மூர்த்தி, பா.ஜ.க. தர்மலிங்கம், தொழிலதிபர் மீனாட்சி சுந்தரம், ராஜ காளிமுத்து, நீதிமன்ற எழுத்தர் முத்துமணி, ஆர்.எஸ்.எஸ். பரமசிவம், பிள்ளையார்குளம் அம்மையப்பன், வழக்கறிஞரும், எழுத்தாளருமான எஸ். ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related

“சட்டத்துறை அமைச்சர் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்”