தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
11 லட்சம் செலவில் மேல்நிலைத் தொட்டி கட்டிக்கொடுத்தும் குழாய் இணைப்பு வழங்காததால் குடிநீரைத் தேடி குடங்களுடன் அலையும் கிராம மக்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னக்க ம்பாளையம். பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி கிராமம் சின்னக்காம்பாளையம். இக்கிராமத்தில் வசிக்கும் 300 குடும்பங்கள் சார்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்களான பட்டியலின மக்களுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கடந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டை கடந்தும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் காலிக் குடங்களுடன் அங்குள்ள விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து அதன் உரிமையாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு குடம் தண்ணீரை பெற்று வந்து அதனை குடிப்பதற்கு பயன்படுத்துவதாகவும், காவிரி கூட்டு குடிநீர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றர். கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு அருகிலேயே உள்ள ஆழ் குழாய் கிணற்றிலிருந்து தண்ணீரை நிரப்பி குழாய்கள் மூலம் தங்கள் பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டி முடிக்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் வீணாகி வரும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் முன் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் காலி குடங்களுடன் நின்று குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
300 பட்டியல் இனம் சார்ந்த குடும்பங்கள் வசிக்கும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை குறித்து கிராமத்தின் சமூக ஆர்வலர் துளசி மணி கூறுகையில்:
கடந்த பல ஆண்டு காலமாக உப்பு தண்ணீரையும், காவிரி தண்ணீரையும் கலந்து கலந்து குடித்து இங்குள்ள அனைவருக்கும் அடிக்கடி உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சளி ,இருமல் ,தொந்தரவு காலம் காலமாக நீடித்து வருகிறது, எங்களது கோரிக்கையை ஏற்று 11 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஒன்றை கட்டிக் கொடுத்தார்கள், அதற்கு குழாய் இணைப்புகள் கொடுப்பதற்காக பிவிசி பைப்புகள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்குள் ஊராட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிந்து போனதால் மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்க முடியாமல் இறக்கி வைக்கப்பட்ட பிவிசி குடிநீர் குழாய்களும், ரூ 11 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியும் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. நாங்கள் அளித்த வரிப்பணம் மண்ணோடு மண்ணாகி காற்றோடு கரைந்து வீணாகி வருகிறது,
இந்த கிராமத்தின் தேவைகளை நிறைவேற்ற ஊராட்சி நிர்வாகமும் கிடையாது, தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினரும் கிடையாது. நாங்கள் யாரிடம் சென்று எங்கள் கஷ்டங்களை கூறி நிவாரணம் தேடுவது என புரியாமல் பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகளை போல பிரச்சனையை தீர்ப்பார் யாரும் இன்றி தாகத்தால் தவித்து வருகிறோம். என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.