தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக ராஜரத்தினம் (52) நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

மணக்கடவைச் சேர்ந்த ராஜரத்தினம் எம்.ஏ., பி.எட். படித்துள்ளார். தற்போது கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். வேட்பாளர் ராஜரத்தினத்திற்கு ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, ஊர்வலமாக நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்து வந்தனர்.

பின்னர் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் தனது வேட்புமனுவை ராஜரத்தினம் தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் வடிவேல்ராமன், ராஜசேகரன், இளங்கோ, கணேசன், விடுதலைவீரன், என்டிஆர் திருப்பூர் திருமுகசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வடிவேல்ராமன் கூறுகையில் தனித் தொகுதியில் இன்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தாராபுரம் தனித் தொகுதியில் பட்டியல் சமூகத்தில் இருக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிட சமூகம், அருந்ததியர் சமூகம் என பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் குறிப்பாக அருந்ததியர் சமூகத்தினுடைய வாக்குகள் இங்கே தாராபுரம் தனித் தொகுதியிலே மொத்த வாக்காளர்களில் 32% உள்ளது. சுமார் 70,000 வாக்குகள் அருந்ததியர் சமுதாய மக்கள் வாக்குகள் உள்ளது. ஆனால், இன்றைக்கு இங்கே திமுக, அதிமுக, ஆளும் கட்சி எந்த கட்சியுமே இதுவரை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளராக அறிவிக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள். 

இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதனால் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின் சார்பாக இன்றைக்கு ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து, தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சமூகப் போராளியும் சிறை சென்ற போராளியுமான சமூக மக்களுக்கு சேவை செய்து வரும் போராளியாக இருக்கக்கூடிய தோழர் மரியாதைக்குரிய ராஜரத்தினம், மணக்கடவு பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் அவர்களை பொது வேட்பாளராக தேர்வு செய்து இன்றைக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். இன்றைக்கு பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அருந்ததியர் சமுதாய மக்களின் வாக்குகள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகளும் ஒருங்கிணைத்து இந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நாங்கள் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாடு முழுதும் இருக்கிற அனைத்து அமைப்புகளும் 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி ஒரு கூட்டமைப்பு சார்பாக வேட்பாளரை தேர்வு செய்து மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இவருடைய வெற்றிக்கு நாங்கள் முழு மூச்சாக பாடுபடுவோம். அருந்ததியர்களை புறக்கணித்த அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் இந்த நேரத்திலே வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Related

“திண்டுக்கல் அருகே திடீர் சாலை மறியல்- கரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு”