திருச்சி: எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஜூன் 29 எழுச்சியுடன் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் தமிழ்நாட்டு பொறுப்பாளரும், தேசியப் பொதுச்செயலாளருமான அப்துல் மஜீத் ஃபைஸி, தேசியச் செயலாளர் யா முகைதீன், தேசியப் பொருளாளர் அப்துல் சத்தார் ஆகியோரும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அச.உமர் பாரூக், மாநிலப் பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, ஹமீது ஃப்ரோஜ், நஜ்மா பேகம், வழக்கறிஞர் ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க் மற்றும் மாநிலப் பொருளாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி, தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி மற்றும் கூட்டணிக்காக அர்ப்பணிப்புடன், அயராது உழைத்த அனைத்து மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சி மிக வலுவான கட்டமைப்போடு, மக்கள் சந்திக்கும் அடுக்கடுக்கான பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ கட்சிக்கு மிக உன்னதமான, பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த மக்கள் அங்கீகாரத்தைத் தக்கவைத்து, இன்னும் தீவிரமான முறையில் மக்கள் நலனுக்கான களப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது, அடுத்தகட்ட அரசியல் செயல்திட்டங்கள் மற்றும் மக்கள் நல வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தேசியத் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, கூட்டத்தின் நிறைவாகப் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக இயற்றப்பட்டன.

தீர்மானங்கள்: பிசிஎம் (BCM) அரசாணை : சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் விரிவான பரிந்துரைகளின் பேரிலும் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான பிசிஎம் (BCM) தகுதி குறித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அரசாணை எண் 31-ன் சட்டப்பூர்வ தன்மையைப் பாதுகாத்து பின்தங்கிய மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சியின் இம்மாநிலச் செயற்குழுத் தீர்மானம் வாயிலாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

7 %  இடஒதுக்கீடு: அரசியல் சாசனம் வழங்கியுள்ள சமூக நீதிக் கோட்பாட்டின்படி, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் உண்மையான மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஒட்டுமொத்த மக்களின் துல்லியமான சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையைத் துல்லியமாக அறிந்துகொள்ளாமல் உண்மையான சமூக நீதியை அடைவது சாத்தியமற்றது என்பதால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்துச் சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும்.

அதேவேளையில், சமூக நீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழக அரசும், ஒன்றிய அரசின் நடவடிக்கைக்காகக் காலம் கடத்திக் காத்திருக்காமல், மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பைத் தன் அதிகார வரம்பிற்குட்பட்டுத் தாமதமின்றித் தொடங்க வேண்டும்.

காலம்காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் பின்தங்கிய, மிகப்பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், திட்டமிட்ட நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பும் முறையான இடஒதுக்கீட்டு உயர்வும் மட்டுமே ஒரே அறிவியல் பூர்வமான தீர்வாக அமையும். எனவே, தமிழக அரசு இதில் எவ்வித அரசியல் தயக்கமும் காட்டாமல், மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்

குறிப்பாக, தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுதாய மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள பின்தங்கிய நிலையில் உள்ளனர்.  எனவே, அவர்களின் இந்த பின்தங்கிய நிலையைச் சரிசெய்து முறையான பிரதிநிதித்துவத்தை வழங்கிட ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம்களுக்கான 3.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை 7 விழுக்காடாக உயர்த்தி வழங்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும் எஸ்டிபிஐ கட்சியின் இம்மாநிலச் செயற்குழு இத்தீர்மானம் வாயிலாக வலியுறுத்துகிறது.

உணவு பாதுகாப்பு சட்டம்: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய திருத்தம், "அனைவருக்கும் உணவு" என்ற உரிமையைப் பலவீனப்படுத்தும் மக்கள் விரோதச் செயலாகும். "அந்தியோதயா அன்ன யோஜனா" திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 35 கிலோ உணவுத் தானியத்தை, புதிய திருத்தத்தின் மூலம் நபர் வாரியாகக் கணக்கிட்டுக் குறைக்க முயல்வது சிறிய தனிக்குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பெருமளவில் பாதிக்கும். ஒரு குடும்பத்தின் வறுமை என்பது அவர்களின் பொருளாதார நிலையை வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அல்ல.

எனவே, ஏழைகளின் உணவைப் பறிக்கும் இந்தத் திருத்தத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; 35 கிலோ உணவுத் தானிய உரிமை எவ்விதக் குறைப்புமின்றித் தொடர வேண்டும்; மற்றும் தற்போதைய மக்கள் தேவையின் அடிப்படையில் விடுபட்ட தகுதியான குடும்பங்களுக்குப் புதிய ரேஷன் அட்டைகளையும், தானியங்களுடன் அவசியமான ஊட்டச்சத்துப் பொருட்களையும் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் இம்மாநிலச் செயற்குழுத் தீர்மானம் வாயிலாக வலியுறுத்துகிறது.

குடியுரிமை: பிறப்புச் சான்றிதழ், கல்வி, இருப்பிடம், ஆதார், பான் கார்டு மற்றும் காவல்துறை சரிபார்ப்பு என அனைத்து அத்தியாவசிய ஆவணங்களையும் முறையாகச் சரிபார்த்த பின்னரே இந்தியக் கடவுச்சீட்டு (Passport) வழங்கப்படுகிறது. மேலும், வாக்குரிமை, வங்கிச் சேவைகள், சொத்து பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்துப் பயன்பாடுகளுக்கும் இந்த ஆவணங்களையே அரசு முதன்மையாக ஏற்றுக்கொள்கிறது. இத்தகைய சூழலில், பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் குடியுரிமைக்கான ஆதாரங்கள் அல்ல என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு நாடு முழுவதும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரம் அடைந்து எண்பது ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், தெளிவற்ற சட்டக் கட்டமைப்பால் எந்தவொரு உண்மையான குடிமகனும் தன் குடியுரிமை குறித்த பயத்தோடு வாழக் கூடாது. எனவே, இந்த நிச்சயமற்ற தன்மையை நீக்கக் குடியுரிமைக்கான ஆதார ஆவணங்களை அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் ஒரு விரிவான மக்கள் நலத் திருத்தத்தைக் கொண்டுவர ஒன்றிய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் எஸ்டிபிஐ கட்சியின் இம்மாநிலச் செயற்குழுத் தீர்மானம் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறது.

FCRA சட்டத் திருத்தம்: ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்த மசோதா-2026, நாட்டில் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் செயல்பாடுகளைக் கடுமையாக முடக்கும் உள்நோக்கம் கொண்டது என இம்மாநிலச் செயற்குழு கருதுகிறது. எஃப்சிஆர்ஏ கணக்குகளை புது தில்லியில் உள்ள எஸ்பிஐ முதன்மைக் கிளையில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும், நிர்வாகச் செலவினங்களுக்கான வரம்பை 50 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாகக் குறைத்துள்ளதும் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவம், கல்வி மற்றும் அவசர நிவாரணப் பணிகளை முற்றிலுமாகப் பாதிக்கும். எனவே, சமூக சேவை அமைப்புகளை நசுக்கும் இந்தத் திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 

தேர்தல் வாக்குறுதி: தேர்தல் களத்தில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் பேராதரவோடு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள தமிழக முதல்வர் ச. விஜய் ஜோசப் தலைமையிலான தவெக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உரிமைத் தொகை ரூ. 2,500 வழங்கும் திட்டம், முதியோர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டம், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நஷ்டங்களினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் திட்டம் மற்றும் மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திட ஆண்டுக்கு ரூ. 15,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் அனைத்தையும் எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு நேரடியாகத் தொடர்புடைய இந்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டையும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு உடனடியாக வகுக்க வேண்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காலந்தாழ்த்தாமல், தங்களின் முதலாண்டு வரவு செலவுத் திட்டத்திலேயே இதற்கான முழுமையான நிதி ஆதாரங்களை உறுதி செய்து, இத்திட்டங்களை மிக விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் ச. விஜய் ஜோசப் தலைமையிலான தவெக அரசை எஸ்டிபிஐ கட்சியின் இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”