ரூ.8 லட்சம் இழந்த கூலி விவசாய தம்பதி கண்ணீர்: அரசு நிவாரணம் வழங்க கிராம மக்கள் கோரிக்கை.
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சின்ன புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பள்ளம் பகுதியில் வசித்து வரும் மாகாளி (60). அவரது மனைவி மகேஸ்வரி (49) கூலி விவசாயிகளாக உள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தோட்டத்தில் தங்கி பட்டி அமைத்து 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர்.
வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் ஆடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, மாலை நேரத்தில் பட்டிக்குள் அடைத்து விட்டு இரவு தூங்கச் சென்றனர். மறுநாள் காலை மீண்டும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல பட்டியை திறந்து பார்த்தபோது, அங்கு இருந்த 48 செம்மறி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடும் நிலையில் இருந்ததாகவும், 25 ஆடுகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த ஒவ்வொரு ஆடும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மதிப்புடையது என்றும், மொத்த இழப்பு சுமார் ரூ.8 லட்சம் வரை இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக ஆடுகளை வளர்த்து அதையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாக கொண்டு வந்த மாகாளி மற்றும் மகேஸ்வரி தம்பதியினர், ஒரே இரவில் தங்களது வாழ்வாதாரம் சிதைந்துவிட்டதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், அருகில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகள் முறையாக அகற்றப்படாமல் வெளிப்புற பகுதிகளில் கொட்டப்படுவதால், தெருநாய்கள் அவற்றை உண்டு ஆக்ரோஷமாக மாறுகின்றன. உணவு கிடைக்காத நேரங்களில் இந்த நாய்கள் கூட்டமாக பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று விடுவதாக குற்றம் சாட்டினர்.
தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் தொல்லைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், எனவே அரசு உடனடியாக தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், ரூ.8 லட்சம் மதிப்பிலான ஆடுகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாகாளி – மகேஸ்வரி தம்பதியினருக்கு உரிய இழப்பீட்டு நிவாரணத் தொகையை அரசு விரைந்து வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.