தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில், நகர மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் சி. சிவசாமி (முன்னாள் எம்.பி.) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, அவைத்தலைவர் டி.டி.கே. காமராஜ் மற்றும் நகரச் செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பங்க் மகேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் சி. சிவசாமி தொண்டர்களிடையே ஆற்றிய அரசியல் விமர்சன உரையின் விரிவான விவரம் பின்வருமாறு:

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி, நகராட்சி தேர்தல்களில் அதிமுக முழு பலத்துடன் களம் கண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தனித் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. மூலனூர், குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. தாராபுரம் நகரத்தில் மட்டும் சற்று குறைவான வாக்குகள் கிடைத்திருந்தாலும், தாராபுரம் நகரம் எப்போதுமே அதிமுகவின் பலத்த கோட்டையாகவே விளங்கி வருகிறது.

சத்தியபாமாவின் துரோகத்திற்கு கண்டனம்:

​கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சத்தியபாமாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் வெற்றியும் பெற்றார். ஆனால், வெற்றி பெற்ற சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவிற்கு துரோகம் இழைக்கும் வகையில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார்.

இது அதிமுகவிற்கும், தாராபுரம் தொகுதி மக்களுக்கும் அவர் செய்த மிகப்பெரிய துரோகமாகும். அவருக்காக ஒன்றிய, நகரப் பகுதி செயலாளர்களும் கழக நிர்வாகிகளும் தங்களின் சொந்தப் பணத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அவரை வெற்றி பெற வைத்தனர். ஆனால் அவரோ, அதிமுகவிடம் எந்த நிதியும் வாங்கவில்லை என்றும், சொந்த நிதியில் வெற்றி பெற்றேன் என்றும் பத்திரிகையாளர்களிடம் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மட்டும் இல்லை என்றால், சத்தியபாமா யார் என்றே தாராபுரம் மக்களுக்குத் தெரிந்திருக்காது.

கே.வி. ராமலிங்கம் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் மீதான விமர்சனம்:

​முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், தனது சொந்த சுயலாபத்திற்காக அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததுடன், மற்றவர்களையும் அங்கு இணையுமாறு வற்புறுத்தினார். ஆனால், அதிமுக கட்டுக்கோப்பான ஒரு தொண்டர்கள் கட்சி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோரை விட்டுவிட்டு யாரும் செல்லவில்லை; கட்சி அப்படியேதான் இருக்கிறது. பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்து, ஆயிரம் பேர் தவெக-வில் இணைந்துவிட்டதாக ஒரு ஏமாற்று வேலையை கே.வி. ராமலிங்கம் செய்து வருகிறார்.

சினிமாவிற்குப் புறவாசலில் கள்ளத்தனமாக டிக்கெட் வாங்குவது போல, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரடியாகச் சந்திக்கக்கூட முடியாமல், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்குப் புறவாசல் வழியாகச் சென்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர்  ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ச்சுனா போன்றவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டு ஆதாயம் தேடப் பார்த்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, கழக நிர்வாகிகளின் குறைகளைக் கேட்டறிந்தோம். முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு நாள் கூட கழக நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்கவில்லை என்றும், பத்து ஆண்டுகளாக 'தானே ராஜா, தானே மந்திரி' என்ற தோரணையில் சுற்றித்திரிந்தார் என்றும் நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர். அவருக்கு இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுத்து, அவரைத் தோல்வியடையச் செய்துள்ளனர். அவருடன் தவெக-விற்குச் சென்ற சிலர், மீண்டும் அதிமுகவிற்கே வர விரும்புவதாக என்னிடம் தெரிவித்துள்ளனர்.

தாய் கழகத்திற்குத் திரும்ப அழைப்பு:

​தாராபுரத்தைப் பொறுத்தவரையில், கட்சியை விட்டுச் சென்ற சிலர் தொடர்ந்து என்னிடம் தொலைபேசியில் பேசி, மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாகக் கூறிவருகின்றனர். அவர்களை வரும் வாரத்தில் நேரில் சென்று, அவர்களின் இல்லங்களிலேயே சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் கட்சியை விட்டுச் சென்றிருந்தாலும், மீண்டும் இங்கே வருவதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. 'வாருங்கள், நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்' என்று அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தவெக-வில் இணைந்துவிட்டு, தற்போது அங்கு இருக்க மனமில்லாமல் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார். எனவே, அவர்கள் கூச்சப்பட்டுக்கொண்டும் வெட்கப்பட்டுக்கொண்டும் இருக்காமல் தாராளமாக வரலாம்; அதிமுக அவர்களை எப்போதும் வரவேற்கும்.

தவெக ஆட்சியின் அவலங்கள்:

​தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருந்தாலும், அவர்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கான அரசு என்று கூறிப் பொறுப்பேற்ற விஜய் ஆட்சியில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஏன், தவெக-வின் சொந்தக் கட்சி நிர்வாகிகளே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளது அனைத்து ஊடகங்களிலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜய்யின் பேச்சை நம்பி ஓட்டுப் போட்ட தமிழக மக்கள், தற்போது ஏமாந்துவிட்டதாகப் புலம்பி வருகின்றனர். எனவே, தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி இனி தமிழகத்தில் முழுமையாக, நிலையான ஆட்சியாக நீடிக்காது.

இடைத்தேர்தல் சவால்:

​தாராபுரம் உட்பட தமிழகத்தின் ஐந்து தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலிமையான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அவர்கள் கண்டிப்பாக ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடியாரின் செல்வாக்கை நிலைநாட்டுவார்கள்.

யாரோ சிலர் பேசுவதற்காக, 'செல்லாத காசுகளுக்கும் காய்ந்து போன சிறகுகளுக்கும்' அதிமுகவினர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாராபுரம் இடைத்தேர்தலில் தாராபுரத்தைச் சேர்ந்த ஒரு உண்மையான தொண்டர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார்; அதனை எடப்பாடியார் முறைப்படி அறிவிப்பார். கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து கட்சிக்காக உழைத்தால், அவர்களுக்குரிய தகுந்த அங்கீகாரம் நிச்சயம் வழங்கப்படும் என்று மாவட்ட கழகச் செயலாளர் சி. சிவசாமி பேசினார்.

Related

“முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவி ராஜினாமா: அதிமுகவிலிருந்து விலகினார்”