தாராபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமாவை கட்சித் தலைவர் ஜோசப் விஜய் நியமித்ததைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து தாராபுரம் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் வந்த சத்தியபாமாவுக்கு சர்ச் சாலை பகுதியில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் மேளதாளங்கள், டிரம் செட் முழங்க, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சத்தியபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற பேரணி சர்ச் சாலை வழியாக புறப்பட்டு அண்ணா சிலை அருகே சென்றடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு சத்தியபாமா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், நாச்சிமுத்துபுதூர் பகுதியில் உள்ள கர்ணா திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை சந்திக்கும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் ஆவின் துணைத் தலைவர் டி.எஸ்.சிவகுமார், நகரச் செயலாளர் அபுதாஹீர், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் சத்தியபாமா பேசியதாவது: “தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் என்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்ததற்கு முதலில் எனது கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளின்போது, கட்சித் தலைமை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லத் தவறிவிட்டது. குறிப்பாக, தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்ற மனக்குறை எனக்கு ஏற்பட்டது.
நான் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கட்சிக்குள் எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கின.
இதனால், தமிழக மக்களுக்காக உண்மையாகப் பணியாற்றக்கூடிய தலைமையைப் பற்றி சிந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையே அதற்கான சிறந்த வாய்ப்பு என்று உணர்ந்தேன். அதன் காரணமாகவே எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மக்கள் பணியாற்ற முடிவு செய்தேன்.
நான் பதவியை ராஜினாமா செய்து கழகத்தில் இணைந்தபோது, பல்வேறு விமர்சனங்களும், பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் வெளியானதாக செய்திகள் வந்தன. ஆனால், நான் எந்தவித பணப் பலனுக்காகவும் இந்த முடிவை எடுக்கவில்லை. தாராபுரம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் எனது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்.
இதனை நான் கட்சித் தலைவர் ஜோசப் விஜய் அவர்களிடமும் தெளிவாகத் தெரிவித்தேன். அதற்கு அவர், ‘நீங்கள் சென்று மக்கள் பணியாற்றுங்கள். உங்களுக்கு மக்கள் பணியாற்ற நல்ல வாய்ப்பு வழங்குகிறோம்’ என்று தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே இன்று எனக்கு தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘மக்களுக்காக நேர்மையான ஆட்சி’
தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நேர்மையான நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை, கட்சித் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை யாராக இருந்தாலும் தவறு செய்யக்கூடாது என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியாக இருக்கிறார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கும் விதத்திலும், தவறுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் விதத்திலும் பொதுமக்கள் அனைத்தையும் நேரடியாகக் கவனித்து வருகின்றனர். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
‘திமுக, அதிமுகவுக்கு இனி வாய்ப்பு இல்லை’: தமிழகத்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. இனி தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் எளிதில் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
வரும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்குக் காரணம், மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வரும் ஒரே தலைவர் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகியுள்ளது. மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் கூட்டம் கூட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதற்கு காரணம், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதுதான்.
தமிழக வெற்றிக் கழகத்தையும், அதன் தலைவரையும் விமர்சித்து சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடிய தலைவர் ஜோசப் விஜய் அல்ல. தாராபுரத்தில் எனது புதிய பொறுப்பை இன்று முதல் முழு அர்ப்பணிப்புடன் தொடங்குகிறேன். நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்பட்டு, பாமர மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவேன். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், தாராபுரம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முழுமையாகப் பணியாற்றுவேன்” என்று சத்தியபாமா தெரிவித்தார்.
புதிய மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சத்தியபாமாவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சத்தியபாமாவின் வருகை மற்றும் புதிய மாவட்டப் பொறுப்பு, தாராபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் எதிர்பார்ப்பை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.