தூத்துக்குடி - தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் செயல்படும் தனியார் சட்ட கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி மாணவிகளுக்கு சேர்க்கை  நடைபெற்றுள்ளதால் பாதிக்கப்பட்ட 36 மாணவிகள் இரண்டாம் நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் வல்லநாடு அருகே அமைந்துள்ளது துளசி பெண்கள் சட்டக்கல்லூரி.. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு முதலாமாண்டு படிப்பதற்காக 96 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கல்லூரியில் மொத்தம் 60 மாணவிகள் மட்டுமே படிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை தாண்டி 36 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் அனுமதி இல்லாமல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலாம் ஆண்டுக்கான தேர்வுகள் வந்தபோது இந்த 36 நபர்களுக்கு ஹால்டிக்கெட் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  அனுமதி பெற்று தருவதாக உறுதிமொழி அடுத்ததை தொடர்ந்து  போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் இந்த 36 மாணவிகளுக்கும் உரிய அனுமதி பெற்று தர தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகம் எடுக்கவில்லை எனக்கு கூறப்படுகிறது. மேலும், கல்லூரிக்கான பல்கலைக் கழக அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாணவிகள் தொடர்ந்து வகுப்பிற்கு வர வேண்டும் எனவும் கல்லூரி நோட்டிஸ் போர்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸ் மாணளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மாணவிகள் 36 பேரும்  நேற்று கல்லூரி  நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் மாணவிகள் அனைவரும் கல்லூரி வாசலில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் உரிய பதில் அளிக்காததால் இரவிலும் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாளாக மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வல்லநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கல்லூரி நிர்வாகத்தினரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, கல்லூரியை அம்பேத்கர் பல்கலைகழகமே ஏற்று நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டுள்ள 36 மாணவிகளுக்கு உரிய அனுமதி வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து இரண்டாம் நாளாக மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related

“பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா..!”