தூத்துக்குடி : தூத்துக்குடி எம் வி சித்தா என்ற கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது பலத்த காற்று காரணமாக கப்பலில் ஓட்டை விழுந்து கப்பலுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் கடலோர காவல் படை வீரர்கள் வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் மற்றும் பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டதால் கப்பல் கடலில் மூழ்காமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளிட்ட சரக்குகள் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு கடந்த 27-ந் தேதி எம்.வி.சித்தா என்ற சிறிய வகை சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் கார்கள், ஈச்சமரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றப்பட்டு இருந்தன. இந்த கப்பல் திருச்செந்தூர் அருகே சென்ற போது பலத்த காற்று காரணமாக கப்பலில் இருந்த பொருட்களை மூடி வைத்து இருந்த தார்ப்பாய் காற்றில் பறந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கப்பலில் சில இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் கப்பலுக்குள் நுழையத் தொடங்கி உள்ளது.

இதனால் கப்பல் கேப்டன், அவசர உதவி கோரி தகவல்களை அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பலான அதுல்யா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. பின்னர் கடலோர காவல்படையின் சிறப்பு ஏறுதல் குழு மற்றும் மீட்பு நிபுணர்களுடன் இணைந்து அவசர பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொண்டனர். கப்பலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகளையும் மேற்கொண்டனர். இதனால் கப்பலுக்குள் நீர் புகுவது கட்டுப்படுத்தப்பட்டது.
மேலும் கப்பலில் முழுமையாக பழுதுபார்ப்பு மேற்கொள்ளும் வகையில், கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பராமரிக்கப்பட்டு, கப்பலின் மேல் புதிதாக தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கடலோர காவல்படையினர் கப்பல் பணியாளர்கள், கப்பல் மற்றும் கடல் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உறுதி செய்தனர். மேலும் கடலோர காவல் படை வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாக கப்பலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் ஈச்சமரம் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் பத்திரமாக கடலில் மூழ்காமல் மீட்கப்பட்டது இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.