இடைத்தேர்தலில் தவெக செல்வாக்கை கூட்ட வேண்டும். அஜித் ஆதரவு வேறு யாருக்கும் போய் விடக்கூடாது என்பதற்காக போட்ட திட்டம் தான் முதல்வர் விஜயின் லண்டன் பயணம். அது ஒரு பட ப்ரமோஷன் போன்றது என நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் என்.பி. ராஜா விமர்சனம் செய்தார்.
முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளரான என். பெரியசாமியின் மகன், முன்னாள் திமுக அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் சகோதரரான என்.பி. ராஜா நாம் இந்தியர் கட்சி என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி வருகிறார். பல்வேறு தேர்தலில் இவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் இந்தியர் கட்சி தலைவர் என்பி ராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் தமிழக வெற்றிக்கழக ஆட்சி மீது திருப்தி இல்லை. மக்கள் சேவை இந்த ஆட்சியில் இல்லை. போதிய அனுபவம் இல்லை. ஊழல் ஊழல் என்று பேசினால் ஊழலைப் பற்றியே மக்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறார்கள். அது கொஞ்ச காலத்திற்கு தான் இரண்டு மாதத்திற்கு தான் அதன் பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் திருப்தி அடையும் அளவில் நல்லது செய்ய வேண்டும்.
சட்டமன்ற கூட்டதொடர் முழுவதும் திமுகவை எதிர்த்தே ஓடிவிட்டது இப்பொழுது 10, 15 நாட்கள் ஆகி உள்ளது புதிதாக தலைமைச் செயலகம் கட்டுகிறோம். முதலீடு அவ்வளவு ஈர்த்து உள்ளோம் என்று கம்பேரிசன் தான் செய்கிறார்கள். அதனால் சிறப்பாக ஆட்சி இல்லை. எங்களுடைய கட்சி எண்ணம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு தவெகவை எதிர்த்து நிற்பது அரசுக்கு கெட்ட பெயர்.
கடந்த திமுக ஆட்சியில் அடிமட்ட அளவிற்கு ஊழல் சென்று விட்டதால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்.
நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக செல்வாக்கை கூட்ட வேண்டும் மேலும் அஜித் ஆதரவு வேறு யாருக்கும் போய் விடக்கூடாது என்பதற்காக போட்ட திட்டம் தான் லண்டன் பயணம் அது ஒரு பட ப்ரமோஷன் போன்றது எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடிக்கு கப்பல் கட்டும் தளம் தேவை. கப்பல் கட்டும் தளம் வந்தால் தூத்துக்குடி மேலும் வளரும். ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் போன்று தூத்துக்குடி வளர்ச்சி அடையும்.
தூத்துக்குடிக்கு புதிய அனல்மின் நிலையம் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அனல் மின் நிலையங்களால் தூத்துக்குடி மாசுபாடாகி உள்ளது. எனவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.