நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தூத்துக்குடி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் விவசாயிகள் டிராக்டரை சாலையில் மறித்து, கருகிய வாழைப்பயிர்களை வீசி மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு. 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், பாபநாசம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை விவசாய பாசன குளமான கோரம்பள்ளம் குளம் மற்றும் பெட்டை குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி- திருநெல்வேலி நான்கு வழி சாலையில் தட்டப்பாறை விளக்கு அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கோரம்பள்ளம் குலையன் கரிசல்,  காலங்கரை அத்தி மரப்பட்டி,  சேர்வைக்காரன் மடம்,  தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில் டிராக்டரில் வந்து டிராக்டரை சாலையை மறைத்து கருகிய வாழைப் பயிர்களை சாலையில் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளும் பலமுறை மனு கொடுத்தும் தொடர் போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் சுமார் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் நீர்வளத்துறை மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து 1500 கன அடி நீர் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

 தொடர்ந்து தண்ணீர் திறக்க விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இந்த மறியல் போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் திடீரென மயக்கமான சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. விவசாயிகளின் போராட்டம் காரணமாக நான்கு வழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் அன்சித் நாயர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”