இரண்டு தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகிவிட்ட நிலையில், மூன்றாவது தலைமுறையையாவது மது இல்லாத தமிழகத்தில் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணியின் மனைவியும், எம்.எல்.ஏ-வுமான சௌமியா அன்புமணி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ கூறியதாவது: "இன்று தூத்துக்குடி, நாளை திருநெல்வேலி, நாளை மறுநாள் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ளேன். நாளை தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ள நிலையில், அதனை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்.

முன்னதாக அன்புமணி 'தாமிரபரணி காப்போம்' நடைப்பயணம் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார். சட்டப்பேரவையிலும் தாமிரபரணி கழிவுநீர் பிரச்சனை குறித்து நான் பேசியுள்ளேன். தமிழகம் முழுவதும் ஆறுகளில் கழிவுகள் கலக்கப்படும் நிலையில், தாமிரபரணியும் அதற்கு விதிவிலக்கல்ல. கழிவுகள் எவ்வாறு கலக்கின்றன, அதை எப்படிச் சரிசெய்யலாம் என்று நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன்.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தொடர்ந்து 7-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியைச் சுற்றி பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.

நேற்று சென்னையில் 'மதுவில்லா தமிழகம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகிவிட்ட நிலையில், மூன்றாவது தலைமுறையையாவது மது இல்லாத தமிழகத்தில் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, மற்றவர்களின் உடல்நிலையைப் பற்றிப் பேசியது கண்டிக்கத்தக்கது. யாரையும் உடல் ரீதியாகக் கேலி செய்யக் கூடாது. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்து 100 நாட்கள் மட்டுமே ஆகிறது. மதுக்கடைகளை மூடியது மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான 'சிங்கப்பெண் படை' திட்டம் போன்றவற்றை வரவேற்கிறேன்.

10,000 காவல் அதிகாரிகள் நியமிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். அதேபோல், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய, தொழற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்கும் தேர்தல் வாக்குறுதியைச் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.

 


 

Related

“அரசு துறையில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்யவேண்டும் ”