தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் சகாயராஜனின் தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரிய வின்சென்ட். 72 வயதான இவர் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சகாயராஜனின் தந்தை ஆவார். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாகக் கூறி, கடந்த திங்கட்கிழமை மரிய வின்சென்ட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் நேசமணி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற கற்பகராஜ், மரிய வின்சென்ட் வீட்டிற்குச் சென்று, கள்ளச்சந்தையில் மது விற்பனை குறித்து எப்படி புகார் அளிக்கலாம் எனக் கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கண்ணில் பலத்த காயமடைந்த மரிய வின்சென்ட், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

“திண்டுக்கல் அருகே திடீர் சாலை மறியல்- கரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு”