கப்பல் கட்டும் தளம் அமைக்கும் விவகாரம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் தமிழக வெற்றி கழகம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயல்படுவதை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். உணவுக்கான உப்பு உற்பத்தியை செய்து வரும் இந்த தொழிலில் சுமார் 20,000 மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் அந்த கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளை சுமார் 3000 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக கொரிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை அழித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவளம் பசுவந்தரை சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்கள் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் இந்த பகுதியில் உப்பளத் தொழில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இத்தொழிலை அழித்து புதிதாக கப்பல் கட்டும் தளத்தை கொண்டு வருவதற்கு பதில் கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, கோவளம் பசுவந்தறை தன்பாடு சிறிய அளவுப் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் முத்தையாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சங்கத்தின் செயலாளர் சேகர் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே கப்பல் கட்டும் தளம் வரும் உப்பளங்களை எல்லாம் அகற்ற போகிறோம் எனக் கூறினார்கள்.

அதை எதிர்த்து தொடர்ந்து நாங்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு எங்களது உப்பளங்களை அழித்து கொண்டு வர வேண்டாம் என தான் நாங்கள் கூறுகிறோம். கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு பல்வேறு மாற்று இடம் நிறைய உள்ளது.
ஆனால் உப்பளங்களை எல்லா இடங்களிலும் அமைக்க முடியாது. ஆனால் கப்பல் கட்டும் தளம் அப்படி அல்ல எந்த இடத்தில் வேண்டுமானாலும் கப்பல் கட்டும் தளம் கடற்கரையோர பகுதிகள் எதுவாக இருந்தாலும் அமைக்க முடியும். கடந்து ஆண்டு நாங்கள் நடத்திய போராட்டங்களில் அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை ரத்து செய்வோம் என கூறினார்கள்.
ஆனால் இப்போது எங்களை சந்திக்கவே மறுக்கிறார்கள், குறிப்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்திக்கவே முடியவில்லை, அமைச்சர் ஸ்ரீநாத் உங்களக்கு நல்ல செய்தி சொல்கிறோம் எனக் கூறுகிறார். ஆனால் எந்த பதிலும் முறையாக கூற மாட்டேன் என்கிறார். இந்த நிலை நீடித்தால் எங்களது போராட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
நடைபெறக்கூடிய கூடிய தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் பண்ண தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.