தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு முன்னாள் தலைவர் மற்றும் அவரது மருத்துவர் மகன் மீது 10க்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இருவரும் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ராஜீவ் நகரில் வசிப்பவர் முருக பூபதி. இவர் 2012 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்தி தேவி ஆலயக்குழுவின் முன்னாள் தலைவராக இருந்து வந்தார். தற்போது புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக ஆலய பணிகளில் இருந்து விலகி தனது மகனின் மருத்துவமனையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் வசிக்கும் தூத்துக்குடி ராஜீவ் நகர் வீட்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலய குழுவினர் 10 பேர் திடீரென வீட்டிற்குள் கதவைத் தட்டி நுழைந்து பழைய ஆவணங்களை தருமாறு கோரி ரகளையில் ஈடுபட்டு முருக பூபதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து தடுக்க வந்த அவரது மகன் மருத்துவர் முகேஷ் கோகுல் ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து காயமடைந்த இருவரும் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீடு புகுந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை மீது தாக்குதல் நடத்தி தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக காயமடைந்த மருத்துவர் முகேஷ் கோகுல் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.