தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்கள் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் ஆண்கள் நேரடியாக பாதிப்பதோடு, பொதுஇடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எனவே, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் வியாபாரிகளிடம் பீடி, சிகரெட் விற்பனை செய்யும்பட்சத்தில் அவற்றை கடையின் அருகில் புகைக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி அதற்கான எச்சரிக்கை பிரசுரங்கள் ஒட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட சுகாதார துறை நியமன அலுவலர் ஆறுமுகநயினார் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை எச்சரிக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிகர்களிடம் வழங்கினார். அதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளரும், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்றச் சங்க தலைவருமான பீட்டர் பெற்றுக்கொண்டார். உடன், சங்க செயலாளர் கே.பெரியசாமி மற்றும் வியாபாரிகள் உடனிருந்தனர்.

Related

“கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைப்பு விழா: ”