தூத்துக்குடி அருகே இடி மின்னலுடன் பெய்த கனமழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்த தனது ஆடுகளை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக சென்ற மதன்குமார் என்ற இளைஞர் இடி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மதன்குமார் (24), தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். இன்று மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், அவரது ஆடுகள் வீட்டின் அருகேயுள்ள சாலையில் மேய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது
மழையில் நனைந்து கொண்டிருந்த ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மதன்குமார் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இடி மின்னல் அவரைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்ற இளைஞர், இடி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.