இந்தியா முழுவதும் நடந்தே பயணம் மேற்கொள்வதை லட்சியமாகக் கொண்டு, இதுவரை நேபாளம் பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவில் 26 மாநிலங்களுக்கு மேல் கடந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைப் பயணத்தில் சாதனை படைக்கும் மதுரை இளைஞர்
விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்., ராணுவ வீரர்களை மதிக்க வேண்டும்., போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பதே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் என பேட்டி.!
தமிழ்நாட்டில் உள்ள மதுரையைச் சேர்ந்தவர் கோகுல் 29 வயதான இளைஞர்.. இவரின் தந்தை கணேஷ் காலமான நிலையில், அவரது தாயார் ராஜேஸ்வரி குடும்பத்தை கவனித்து வருகிறார். சென்னையில் கணக்கு மேலாண்மை தொடர்பான பணியில் ஈடுபட்டு வந்த கோகுல், விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும், நாட்டிற்காகப் பணியாற்றும் ராணுவ வீரர்களை மதிக்க வேண்டும், சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தைத் தொடங்கிய கோகுல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் கடந்து தற்போது 542வது நாளில் இன்று தூத்துக்குடி வந்துள்ளார். இதுவரை 26 மாநிலங்களுக்கு மேல் பயணம் செய்துள்ளதாகக் கூறும் இவர், ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், இயற்கைச் சூழல் ஆகியவற்றை நேரில் அறிந்துகொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து, ஜம்மு காஷ்மீர், கார்கில், லடாக், இமாச்சலப் பிரதேசம், புதுடெல்லி, ஆக்ரா, லக்னோ, அயோத்தி வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பீகார் வழியாக நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். பின்னர் டார்ஜிலிங், சிக்கிம், மேற்கு வங்கம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து, ஆந்திரப் பிரதேசம் வழியாகத் தமிழகம் வந்தடைந்துள்ளார்.

பயணத்திற்காக அதிக அளவில் பணம் செலவிடாமல், பல கிலோமீட்டர் தூரம் நடந்தும், வழியில் செல்லும் வாகனங்களிடம் லிப்ட் கேட்டும் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இருந்தும், தனது இருப்பிடம், உணவு செலவுகளுக்காகப் பொதுமக்களின் உதவியையும் பெற்று வருகிறார். இதற்காகக் கழுத்தில் ஜி-பே (Google Pay) பணப்பரிவர்த்தனைக்கான க்யூஆர் குறியீடு (QR Code) ஸ்கேனரை அணிந்துள்ளார். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் அவருக்குப் பணம் அனுப்பி பயணச் செலவுக்கு உதவலாம்.
தூத்துக்குடி வந்த கோகுல், இங்குள்ள இளைஞர்களைச் சந்தித்து போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இது குறித்து கோகுல் கூறுகையில், விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும், நாட்டிற்காகப் பணியாற்றும் ராணுவ வீரர்களை மதிக்க வேண்டும், சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே எனது பயணத்தின் முக்கிய நோக்கம்.
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய எனது பயணம், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைக் கடந்து தற்போது தூத்துக்குடி வந்துள்ளேன். நடந்தும், வாகனங்களில் லிப்ட் கேட்டும் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கிய தனது பயணத்தை, 2027-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி 730வது நாளில் இரண்டு ஆண்டுகள் கழித்து நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன். தான் பயணத்தைத் தொடங்கிய கன்னியாகுமரியிலேயே மீண்டும் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.