தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதம் தோறும் நடக்கும் மாமன்றக் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள இரு மாமன்ற உறுப்பினர்களை மையமாகக் கொண்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 51-வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மந்திரமூர்த்தியும், 17-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராமரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதில், மந்திரமூர்த்தி அதிமுக மாநகராட்சி கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கியதாக அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்த மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர், தாங்கள் முன்பு அமர்ந்து வந்த அதே இருக்கையில் அமர அனுமதி வழங்க வேண்டும் என்று மேயர் ஜெகனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன், "அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையில் மந்திரமூர்த்தி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, பழைய அமர்வு ஏற்பாட்டை தொடர முடியாது," என்று தெரிவித்தார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து, தங்களுக்கு உரிய இருக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், "அனுமதி வழங்க முடியாது" என்று மேயர் ஜெகன் உறுதியாக தெரிவித்தார்.
அப்போது மந்திரமூர்த்தி, "மேயர் ஜெகன் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மாநகரில் பெண்கள் கூட பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை உள்ளது," என்று குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மாமன்ற உறுப்பினர்கள் குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதனால் கூட்டத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.
இறுதிவரை மந்திரமூர்த்தி மற்றும் ராமர் தரையில் அமர்ந்தபடி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.