தூத்துக்குடி: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது! என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
”உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது!
உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்த்துக் கொள்ள பள்ளி குழந்தைகளை பயன்படுத்துவதா? தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து அரசு பள்ளியில் படித்து எப்படியாவது முன்னேறிட வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளிடம் தங்களது மேதாவித்தனத்தை காட்ட நினைப்பது தமிழ் சமுதாயத்துக்கு நல்லதல்ல. அரசுப் பள்ளி ஒன்றில் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டு மாண்பை சீர்குலைத்த நிலையில், அரசுப் பள்ளி குழந்தையை கேள்விகளின்மூலம் கூனிக் குறுக வைத்து அந்த வீடியோவை பரப்பி மனிதத் தன்மையற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா.
ஓர் அரசுப் பள்ளிக்கு அமைச்சர் பெருமக்களோ, மாவட்ட ஆட்சியரோ வருகிறார்கள் எனில் இயல்பாகவே பள்ளி குழந்தைகள் மத்தியில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அந்த சூழலில் கேமராவையும் மைக்கையும் தூக்கிக் கொண்டு அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான கும்பல் பள்ளி குழந்தையிடம் தடபுடலான கேள்வியைக் கேட்டால் ’எந்த குழந்தைக்குதான் பதற்றம் வராது.
அந்த குழந்தைக்கு நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தாலும் கூட அந்த சூழலில் தடுமாற்றம் வருவது மிக மிக இயல்பு. ஆக, குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் அவர்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் அமைச்சர் நடந்து கொண்டிருப்பது அருவருக்கதக்க செயல்! அதுமட்டுமில்லாமல், ’லாஸ்ட் பெஞ்ச்’ குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்’ என்கிற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார்.
சரி எப்படியோ போங்க. உங்க பெருமையை பறைசாற்ற அந்த மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் உங்கள் ரீல்ஸ் தேவையா? ரீல்ஸ் போட வேண்டியது அவ்வளவு முக்கியமானதா?. குழந்தைகளின் புகைப்படத்தை பொதுத்தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பது அமைச்சருக்கு தெரியாதா?. ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்று தெரியாதவர்கள் தான் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.
எந்த குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார்களோ அந்த பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கி உள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இப்படி தறிக்கெட்டுச் செல்லும் தவெக அமைச்சர்களை நல்வழிப்படுத்தவேண்டிய முதலமைச்சர் விஜய் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?.
அரசுப் பள்ளிகளுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாகவும் அவர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது நமது தி.மு.க அரசு. ஆனால் குழந்தைகளை அரசிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய மோசமான சூழலில் தமிழ்நாடு சிக்கியிருப்பது பெரும் மன வேதனையை தருகிறது. இப்படிப்பட்ட மந்திரிகளை வைத்துக்கொண்டு பேசாமுதல்வர் எத்தனை காலத்துக்கு பொழுதுபோக்க போகிறார் என்று தெரியவில்லை என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.