முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு முதலமைச்சர் தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்  என தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.‌

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: தற்போதைய முதலமைச்சர் 108 இடங்களைப் பெற்றுள்ளார். பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கேட்டு, கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்துள்ளார். 108 இடங்களைப் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை நடத்துவதாகக் கூற முடியுமா? பல மாவட்டங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. சுமார் 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், 65 சதவீத வாக்காளர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால், அதற்குள் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் பேசுகின்றனர்.

மேலும் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாக உள்ளன. அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் முக்கிய விவரங்களைக்கூட சரியாகக் கூற முடியாத நிலை உள்ளது. இப்படிப் பட்டவர்கள்தான் ஆட்சி நடத்துகின்றனர்.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் இரண்டு இடங்களில் போட்டியிட்டதாகவும், அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்திருப்பதாகவும் விஜய் மீது விமர்சனம் செய்தார். 

மேலும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் எழுந்து பேசும்போது ஆளுங்கட்சியினர் அச்சப்படுகின்றனர். அனைத்து துறைகளின் விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு பேசக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது டம்மி முதலமைச்சர் ஆட்சி நடைபெறுவதாக மக்கள் மத்தியில் விமர்சனம் உள்ளது. 

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும். எழுதி வைத்திருப்பதை மட்டும் படித்துவிட்டு செல்லும் நிலை இருக்கக்கூடாது. முதலமைச்சர் தமிழகத்தின் முதல் குடிமகனாக இருப்பதால், அவரது பொது நிகழ்வுகள் குறித்தும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சில பிரபலங்களுடனான அவரது நிகழ்வுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு முதலமைச்சர் தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

மேலும்,  “தமிழக வெற்றிக் கழகம்தான் அதிமுக என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அதிமுகவில் இருந்து சில முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் சிலர் கடந்த காலங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள். அவர்கள் கட்சியை விட்டு சென்றாலும், அதிமுக தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் கட்சியிலேயே உள்ளனர். தற்போது அதிமுக தூய்மையான சக்தியாக உள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய சிலரே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்” என கடுமையாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் விமர்சித்தார்.

Related

“திண்டுக்கல் அருகே திடீர் சாலை மறியல்- கரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு”