திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் அடிவார குடியிருப்பில் பதுங்கிய 10 அடி மலைப்பாம்பு.2-வது நாள் தேடலில் தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள நாவிதர் தெரு குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
முருகன் கோயில் மலைச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மலைப்பகுதியில் இருந்து பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பொதுமக்கள் தகவலின் பேரில் முதல் நாளில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் நீண்ட நேரம் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியாததால், அங்கு மலைப்பாம்பு இல்லை என கருதி திரும்பிச் சென்றனர்.
ஆனால், இரண்டாவது நாளும் அதே பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை குடியிருப்புவாசிகள் உறுதியாக தெரிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடுதல் நடத்தினர். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடிக்கும் காட்சியை பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.