திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு, கிராவல் குவாரிகளை திறந்திட வேண்டும், ஆந்திராவில் இருந்து கனிமங்களை ஏற்றி வர அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு குவாரி மற்றும் கிராவல் குவாரிகளை அரசு திறந்திட வேண்டும் என்றும், அருகே ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி சீட்டோடு கனிமங்களை ஏற்றி வரும் லாரிகளை முறையாக அனுமதித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

1000க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் குவாரிகள் செயல்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 60 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திராவில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிம பொருட்களை திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்து கட்டுமானத்திற்கு தேவைப்படும் பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பொருட்களை ஏற்றி வரும் போது வாடிக்கையாளர்களுக்கும் அதிக விலை நிர்ணயம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தனர். 

ஆந்திராவிலிருந்து கனிமங்களை ஏற்றி வரும் வாகனங்களை சிறைப்பிடிப்பதும் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் என அதிகாரிகள் காவல்துறையினர் செயல்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்து வரும் நிலையில் விலை ஏற்றம், தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் குவாரிகளை திறந்திடவும், ஆந்திராவில் இருந்து கனிமங்களை ஏற்றி வர உரிய அனுமதி அளித்திட வேண்டும் எனவும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”