தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்றதை விமர்சித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர். ராசா-வுக்கு விசிக-வின் தலைமை கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
தவெக அமைச்சரவையில் விசிக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு இன்று (மே 22) அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். 'சமூக நீதித்துறை' என பெயர் மாற்றம் கண்டுள்ள 'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை'-யை அவருக்கு தவெக வழங்கியுள்ளது.
இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினராகவும் உள்ள ஆ. ராசா, மிகவும் கடுமையாக விசிக-வை விமர்சித்தார். "சிறுத்தையும், வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்" என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அவர் விமர்சித்திருந்தார்.
இதற்கு விசிக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, விசிக தலைமை தனது 'எக்ஸ்' தள பதிவில், "விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ரத்தமும் சதையுமாய் சிந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்து, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தோள் கொடுத்தது சிறுத்தைகளின் உழைப்பு.
'கட்சித் தாவல்' பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸை வீழ்த்த பாஜக-வுடன் கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்து விட்டு, பிறகு அதே பாஜக-வை எதிர்த்த 'சுயநல சாணக்கியத்தனம்' யாருடையது? இது போன்ற பல அரசியல் நாடகங்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது.
கொள்கைக்காக கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை. அதற்குள் ஏன் இந்த எரிச்சல்? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
விசிக என்னும் பேரியக்கம், எழுச்சித் தமிழரின் உழைப்பால், கோடிக்கணக்கான சிறுத்தைகளின் ரத்தம் மற்றும் வியர்வையால் வளர்க்கப்பட்டது. கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் எந்த நேரத்தில் எந்த அரசியல் உத்தியைக் கையாள வேண்டுமென்று எங்களின் தலைவர் திருமாவளவனுக்கு நன்றாகத் தெரியும்.
எங்களை விமர்சிப்பதற்கு முன், கூட்டணிக் கட்சிகளை வெறும் 'வாக்கு வங்கி' ஏணியாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்ட நினைத்த உங்களின் சுயநலப் புத்தியைப் போய் கேள்வி கேளுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதே போல், விசிக-வின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, அவரது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "அதிகாரம் எளியவர்க்கு, அதிலென்ன ஆத்திரம். ஆற்றாமையால் அள்ளி வீசும், அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது, அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால், அணைக்க முடியா, அனலில் தகித்து போவீர்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை மேலும் ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்தவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, விசிக-வின் உழைப்பில் கோட்டையில் ஏறியவர்கள் "முடத்தெங்கு" பற்றிப் பேசுவது வேடிக்கை என்ற விமர்சனத்தையும் வைத்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.