குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. நேற்று இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக காலை 4.50 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரத்திற்கும் கொடிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து காலை 5.00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி ஜெய் காளி ஓம் சக்தி பராசக்தி என்று பக்தியில் கோஷமிட்டனர்.
அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த தசரா குழுவினர் மற்றும் பக்தர்கள் விரதம் இருப்பதற்கான மாலை அணிந்து கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தசரா குழுவினர் மொத்தமாக காப்புகளை வாங்கிச் சென்றனர்.

இன்று தொடங்கிய இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த 10 நாட்களும் சொந்த ஊர்களில் கூடாரம் அமைத்து விரதம் இருந்து காளி, அம்மன், முருகன், விநாயகர், அனுமன், குறவன், குறத்தி என பல்வேறு விரதங்கள் பூண்டு ஊர் ஊராக சென்று மேலதாளங்கள் முழங்க காணிக்கை பிரிப்பார்கள். பிரிக்கும் காணிக்கையை கடைசி நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

விழா நாட்கள் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முதல்நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான அக்டோபர் 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் சூரசனை அம்மன் வதம் செய்வார். அன்றைய தினம் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தொடர்ந்து திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைளை மாவட்ட காவல்துறை செய்துள்ளது. குறிப்பாக தசரா திருவிழா நாட்களில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 200 பேருந்துகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப குடிநீர், கழிப்பிட வசதிகள், வாகன நிறுத்துமிடம் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

Related

“பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை : பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்!”