மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’: வைகோ ஆவேசம்!

தேனி-சண்முகசுந்தரபுரம்: சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க மாநில அரசு உடனடியாகத் திட்டம் வகுக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும்" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் ஓடைப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது அவர் கூறும் போது: 

விமானத்தில் கொண்டு வரப்பட்டு தூவப்பட்ட வேலிக்காத்தான் விதைகளால், இன்று தமிழகமே படுநாசம் ஆகிவிட்டது. நாட்டு கருவேல மரங்களை இதோடு ஒப்பிடக்கூடாது. காற்றில் உள்ள பிராண வாயுவை உறிஞ்சி, கரியமில வாயுவை உமிழும் இந்த சீமைக்கருவேல மரங்கள் 50 முதல் 100 அடி வரை நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடியவை.

 இதில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு மாடுகள் இதன் நிழலில் நின்றால் சினை பிடிக்காது. இத்தகைய பிசாசுச் செடியை அகற்ற வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், உள்ளிட்ட அனைவருமே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

கருவேல மரங்களை அகற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இந்த மரங்களை வெட்டினால் மீண்டும் முளைத்துவிடும் என்பதால் ஜேசிபி இயந்திரம் கொண்டு வேரோடு அகற்ற வேண்டும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் அரசு இயந்திரங்கள் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்;அதற்கான திட்டத்தை மாநில அரசு வகுக்க வேண்டும்.

மதிமுக என்பது வெறும் தேர்தலுக்காக ஓட்டு வாங்கும் கட்சி அல்ல; தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றும் கட்சி. முல்லைப் பெரியாறு அணை விவகாரம், நாசகார நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் எனப் பல பிரச்சனைகளில் தமிழக மக்களின் நலன் காக்கக் களத்தில் நின்றது மதிமுக தான். ஆனால், நாங்கள் முன்னெடுக்கும் இத்தகைய வாழ்வாதாரப் போராட்டங்களைச் செய்தித் தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிடுவதில்லை; மாலை நேரங்களில் அரசியல் விவாதங்களை மட்டுமே நடத்துகின்றன.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், நேற்றைய தினம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அதற்கெதிராக ஒருமித்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். 

ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், இது மட்டுமே கர்நாடகாவைத் தடுத்து நிறுத்திவிடாது. கர்நாடகாவிற்குப் பின்புலமாக இருந்து மேகதாது அணை கட்டத் தூண்டுவதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான்.

தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்யும் நரேந்திர மோடி சர்க்காரை நான் முழுமுதல் வில்லன் என்று குற்றம் சாட்டுகிறேன். 1965-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தின்போது மக்கள் எவ்வாறு கொந்தளித்து எழுந்தார்களோ, அதேபோன்று ஜாதி, மதம், கட்சி பேதமின்றி மாணவர்களும், இளைஞர்களும் ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அப்போதுதான் மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த முடியும் என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

Related

“அதிமுக எம்எல்ஏக்கள் த.வெ.க.வில் சேர்வது ஆரோக்கியமற்ற அரசியல் : பெ. சண்முகம்”