தேனி : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தனது சொந்த இடத்தில் உள்ள கட்டிடத்தில் டாஸ்மார்க் கடை முறைகேடாக நடைபெறுவதாக கூறி உறவினர்களோடு நிலத்தின் உரிமையாளர் முற்றுகைப் போராட்டம் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள பள்ளிக்கோட்டைபட்டி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் அரசு மதுபான கூடம் செயல்பட்டு வருகின்றது.
இந்த டாஸ்மார்க் கடை மற்றும் மதுபான கூடம் அமைந்துள்ள இடம் சின்னமனூர் தாய் தந்தை ரோட்டில் குடியிப்பவர் ஜெகன் என்பவருக்கு சொந்தமானது. இடம் சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் சாலை பள்ளிக்கோட்டை பட்டி என்னும் இடத்தில் உள்ளது. தனது பெயரில் அந்த இடத்திற்கு உரிய பட்டா பத்திரம் உள்பட அனைத்து ஆவணங்களும் உள்ளதாகவும் இந்த இடத்தை முறைகேடாக பதிவு செய்து தனது நிலத்தில் டாஸ்மார்க் கடை மற்றும் மதுபான கூடம் நடத்துபவர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து அரசு டாஸ்மாக் கடை மற்றும் மதுபான கூடத்தை நடத்தி வருவதாக புகார் கூறி, தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் கடையை அடைப்பதற்கு வருகை தந்தார். கடைக்கு பூட்டு போட முயன்று டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அங்கு செயல்பட்டு வந்த மதுபான கூடம் செயல்படுவதற்கு தற்காலிக தடை விதித்து மதுபான கூடத்தை அடைத்தனர். அதனைத் தொடர்ந்து டாஸ்மார்க் கடையை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர் .
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தனது சொந்த நிலத்தில் வேறொருவரின் பெயரில் தடை இல்லாத சான்றிதழ் வாங்கி முறைகேடாக அரசு டாஸ்மாக் கடை மற்றும் அரசு மதுபான கூடத்தை நடத்தி வருவதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகளின் மண்டல மேலாளரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கடையை பூட்டு போடுவதற்கு உரிய ஆவணங்களோடு நான் வருகை தந்து இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசு டாஸ்மாக் கடை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் அரசு டாஸ்மாக் கடை முன்பு திடீர் முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.