தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற சுருளி அருவி அமைந்துள்ளது.
மிகவும் பெயர்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீகத் தலமாகவும் விளங்கும் இந்த அருவிக்கு, நாடாளாவும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தருகின்றனர். இங்கு வந்து அருவியில் நீராடிவிட்டு, அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகச் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவி ஆற்றுப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் இரண்டாவது நாளாகத் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியில் நீர்வரத்துச் சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவிப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள் தடையை அறியாமல் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், நீர்வரத்து அதிகரிப்பைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.