​தேனி மாவட்டம், வருஷநாடு மற்றும் மேகமலைப் பகுதிகளில் உள்ள 98 மலைக் கிராமங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங்குடியின மக்களும் மலைக் கிராம மக்களும் வசித்து வருகின்றனர்.

​இந்நிலையில், இப்பகுதியை 'ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக' அறிவித்துள்ளதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அங்கு குடியிருக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

​வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழங்குடியின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தேனியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் தலைமையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் திரண்டு, வனத்துறையைக் கண்டித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

​அதேபோல், மற்றொரு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் மற்றும் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

​இப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட கோரிக்கைகள்:

​பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் மலைவாழ் மக்களை எக்காரணம் கொண்டும் வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது.

​மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, அங்குள்ள மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

​சாலை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாகச் செய்து தர வேண்டும்; மேலும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

​பாரம்பரியமாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

 

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”