தேனி : வருசநாடு மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வனத்துறையினரைக் கண்டித்து
​தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ​திண்டுக்கல் சரக டிஐஜி, இரண்டு மாவட்ட எஸ்.பி-கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

​தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ​அவர்கள் அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

​இந்த நிலையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வனத்துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ​சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகப் பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

​திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன், தேனி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி-கள், 8 ஏ.டி.எஸ்.பி-கள் தலைமையில், தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
​மேலும், ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதை பேரிக்காடுகளால் முழுமையாக மூடப்பட்டு, ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தேனி - மதுரை சாலை ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டது.

Related

“ஆண்டிபட்டி அருகே 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடையடைப்பு”