தேனி: வைகை ஆற்றுப்பாலத்திற்கும், ரயில்வே மேம்பாலத்திற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக புரளியை கிளப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே குமுளி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குன்னூர் வைகை ஆற்று பாலத்திற்கும் அருகே ஆற்றுக்குள் செல்லும் ரயில்வே மேம்பாலத்திற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்து ஒரு நபர் கூறினார்.
இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த தேனி மாவட்ட காவலர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவினருடன் வைகை ஆற்று பாலத்திற்கு அடியிலும் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியிலும் நீண்ட நேரம் தீவிர சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு எதுவும் சிக்காத நிலையில், இது புரளியாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர்,
தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அந்த தொலைபேசி எண்ணுக்கு சொந்தக்காரரான கண்டமனூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வரும் நாகபாண்டி என்ற நபரை சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.

மேலும் அந்த விசாரணையில் தான் விளையாட்டாகவே வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று காவல்துறைக்கு தொடர்பு கொண்டு சொன்னதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ள க.விலக்கு காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வைகை ஆற்று பாலத்திற்கும் ஆற்றுக்குள் செல்லும் ரயில்வே மேம்பாலத்திற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக புரளியை கிளப்பி தேனி மாவட்ட அளவில் சம்பவம் நேற்று பேசு பொருளாககியதோடு,
இரண்டு மணி நேரம் வரை மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் தீவிர சோதனையையும் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிவிட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.