தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பொய்த்துப் போனதால் முதலாம் போக நெல் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

இருப்பினும் பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில்  அணையில் இருந்து நெல் நாற்றங்கால் பாவும் பணிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி உள்ளிட்ட திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் விவசாய நீர் பாசன ஆதாரமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது .

 இந்த அணையில் இருந்து வருடம் தோறும் இரு போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் இந்த பாசன நீரை பயன்படுத்தி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் வருடந்தோறும் தென்மேற்கு பருவமழை பெய்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முதலாம் போக சாகுபடிக்காக ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். 

தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இல்லாமல் பொய்த்துப் போனதால் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் சரிந்து வருகின்றது . அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 111.95 அடியாக உள்ளது.

தற்போது விவசாயத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால்  விவசாயிகள் முதலாம் போக நெல் சாகுபடி தொடங்க முடியாமல் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர் .

 மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென்மேற்கு பருவ மழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் ஒரு சில விவசாயிகள் நாட்றாங்கால் பாவுவது உழவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் முல்லைப் பெரியாறு அணையில் பருவ மழை பொய்த்து போயிருந்தாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பருவமழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் நாற்றங்கால்களை பாவி வருகின்றோம் மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாற்றங்கால் பாவுவதற்கு விவசாயிகளுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் பருவ மழை பொய்த்து போனாலும் விவசாய பாதிப்புகள் ஏற்பட்டு நஷ்டம் அடைந்தாலும் அதற்கு அரசு எந்த இழப்பீடு தர வேண்டாம் என்றும் மழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் அணையில் இருந்து  தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர் .

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”