முல்லைப் பெரியாறு அணையில் மத்திய அரசின் ஐவர் அணை மதிப்பீட்டு பொறியாளர்கள் குழு இன்று (01.09.26) முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் அணை பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வை தொடங்கியுள்ளனர்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையில், மத்திய அரசின் ஐவர் கொண்ட அணை மதிப்பீட்டு பொறியாளர்கள் குழு இன்று (01.09.26) முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் அணை பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்கின்றனர்.

குழுவின் தலைவரான, தேசிய நீர்மின் கழக முன்னாள் தலைவரும் முதன்மை நிர்வாக இயக்குனருமான பல்ராஜ் ஜோஷி தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. குழு உறுப்பினர்களான தேசிய நீர்மின் கழக முன்னாள் நிர்வாக இயக்குனர் கோபால் தவான், ரூர்க்கி ஐ.ஐ.டி., யின் நிலநடுக்க பொறியியல் துறை பேராசிரியரும் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மைய தலைவருமான

எம். எல். சர்மா, கங்கை வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணைய முன்னாள் தலைவரும் முல்லைப் பெரியாறு அணையின் முதன்மை கண்காணிப்பு குழு முன்னாள் தலைவருமான குல்ஷன் ராஜ், ஒடிசா நீர்வளத்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் மற்றும் சிறப்புச் செயலாளரான அசுதோஷ் டாஷ் ஆகியோர் ஆய்வில் பங்கேற்கின்றனர்.
இக்குழுவினர் அணையின் பிரதான அணை, பேபி அணை, மதகுகள், சுரங்க பகுதிகள், மழை மானி, நில நடுக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராஃபி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கின்றனர். மூன்று நாள் ஆய்வு முடித்து செப்டம்பர் 4ல் தேக்கடியில் இருந்து டில்லி கிளம்பும் பொறியாளர் குழுவினர், ஆய்வறிக்கையை மத்திய அரசு மற்றும் மத்திய நீர் வள ஆணையம், மத்திய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.